இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அயராது போராடி வரும் அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும். அரசு மருத்துவர்களின் இந்த ஊதிய உயர்வு கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். ஏனெனில், நாட்டிலேயே சுகாதாரத்துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்துவரும் தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழக முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளது. இத்தகைய பாரபட்சமான நிலையை போக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த ஆண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்திய 118 அரசு மருத்துவர்கள் மீது அப்போதைய அதிமுக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்களை பணி இடமாற்றம் செய்து கடும் நெருக்கடிகளை அளித்தது. இந்த நெருக்கடி காரணமாக அரசு மருத்துவர்களின் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய மருத்துவர் லெட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் மரணமடைந்தார். பல்வேறு அரசியல் கட்சிகள் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தன. இருப்பினும் அதிமுக அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “அடுத்து தி.மு.க ஆட்சிதான் வரப்போகிறது. உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் வாக்குறுதி அளித்தார். அதன்படி தற்போது திமுக ஆட்சி அமைத்திருப்பதால் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். மிகவும் இக்கட்டான கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையின் போது தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுக அரசு, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசு மருத்துவர்கள் எந்த அளவிற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் நடந்துகொண்டனர் என்பதை நன்கறியும். கொரோனா பெருந்தொற்று தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்து அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு பணியிலிருந்த நான்கு அரசு மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நடைபெற வேண்டிய மறு ஆய்வும், ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை என்பது அரசு மருத்துவர்களின் குற்றச்சாட்டாக இருந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு மாநிலங்களும் கொரோனா நேரத்தில் பல சிரமங்களுடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்தும் அறிவிப்புகளை வெளியிட்டன. ஹரியானா மாநில அரசு மருத்துவர்களின் ஊதியத்தை இரு மடங்காக உயர்த்தி அறிவித்தும், கர்நாடகாவில் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னரும், தெலுங்கானாவில் போராட்டம் தொடங்கிய 24 மணி நேரத்திலும் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய திமுக அரசு விரைவில் அதனை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் அரசு மருத்துவர்கள் பெரும் நம்பிக்கையில் உள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் கோரிக்கைப்படி ஊதியத்தை உயர்த்துவதால் அரசுக்கு ஏற்படும் ரூ.300 கோடி கூடுதல் செலவுகளை முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இழப்புக்கு மேலான வருவாயை ஈட்டித்தர தயாராக உள்ளதாகவும் அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழக அரசு, அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏ.கே.கரீம்