மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சித்த மருத்துவர்கள் முன்னேற்ற சங்க(SDDA) நிர்வாகிகள் சென்னையில் சந்தித்தனர். அமைச்சரிடம் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வைரஸ் நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற சித்த மருந்துகள் ஆற்றிய பங்கினை நாடு அறியும். சித்த மருத்துவத்தை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் கொல்லிமலையில் கலைஞர் பெயரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும்.
நீண்ட காலமாக தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வரும் சித்த மருத்துவர்களை நிரந்தர அரசு பணியாளர்களாக நியமித்து உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டின் தொன்மையான மருத்துவமான சித்த மருத்துவத்தை மக்கள் மத்தியில் அதிக பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏதுவாக சித்த மருத்துவர்களை கூடுதலாக பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர். சித்த மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளுடன் மூத்த சித்த மருத்துவர்களும் அமைச்சரிடம் நேரடியாக வேண்டுகோள் வைக்க வந்திருந்தனர்.