முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரின் வீடு, நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் என மொத்தமாக 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 20 இடங்கள் கரூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எண்-05- சாய் கிருபா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் மூன்று யூனிட்கள் ரெய்டு நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதால் கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இல்லத்துக்கு முன்பு போலீசார்க
குவிக்கப்பட்டுள்ளனர்.எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.