இதுதொடர்பாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹமதுஆசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் விதமாக மோடி அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் படி, இராணுவ தளவாட தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையிலடைக்கப்படுவார்கள். பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம். பிணை கிடையாது. போராட்டதை தூண்டினால் உடனடி பணி நீக்கம், 2 ஆண்டு வரை சிறை தண்டணை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களையும், தொழிற் சங்கங்களையும் முடக்கும் மோடி அரசின் இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கை எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மோடி அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு எதிராக ஜூலை 26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள நாடுதழுவிய போராட்ட அழைப்பிற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் முழு ஆதரவை தெரிவிப்பதோடு, மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களிலும் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் திரளானோர் கலந்துகொள்வார்கள். முழுக்க முழுக்க உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்கவும், அச்சுறுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்தை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும், நாட்டின் பாதுகாப்புத் தொடர்புடைய ராணுவத் தளவாடங்கள் தயாரிப்புகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு அரசு தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க வேண்டும் எனவும் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்துகின்றது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏ.கே.கரீம்