தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தஞ்சை – தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை-உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, எழுதுபொருள் மற்றும்அச்சுத்துறை ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், முன்மொழிவுகள் மற்றும் புதிய திட்டப் பணிகள் ஆகியவை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, அயல்நாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வாழும் தமிழர்களிடையே தமிழ்ப் பயன்பாட்டினை பரவலாக்கும் வகையில் புதிய முயற்சிகளை, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயல்பட வேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், தொழில்நுட்பக் கல்வி உட்பட உயர்கல்விகளுக்குத் தேவையான பல்வேறு புதிய கலைச் சொற்களை உருவாக்குதல், தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் திங்கள் 12ஆம் நாளினை செம்மொழித் தமிழ் நாளாக அறிவித்தல், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துதல்,உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தொடர்ந்து நிறுவுதல், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் தமிழின் பயன்பாட்டினை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும்தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் சுமார் 800 இருக்கைகள் கொண்ட திரையரங்குடன் கூடிய புதிய கலையரங்கம் அமைத்தல், புதிய டிஜிட்டல் நூலகம் அமைத்தல், இந்நிறுவனத்தில், திரைப்படம் தொடர்பான பழைய கருவிகளைக் காட்சிப்படுத்துகின்ற வகையில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்தும், நினைவு மண்டபங்கள் / மணிமண்டபங்களில் ஒலி/ஒளி காட்சி அமைப்பது, அதனை 360 கோணப் பரிமாணத்தில் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் விழாக்கள் மற்றும் அரசின் திட்டங்கள், விழிப்புணர்வு செய்திகள், சாதனைகள், நலத்திட்ட உதவிகள் தொடர்பான செய்தி வெளியீடுகள் மற்றும் குறும்படங்களை சமூக ஊடகங்களான Facebook, Twitter, Whatsapp, Instagram, YouTube ஆகியவற்றில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் அரசு மைய அச்சகத்தில் புதிய காகித கிடங்கு அமைப்பதுகுறித்தும், அரசு அச்சகத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளும், சமுதாயக் கூடமும் கட்டுவதுகுறித்தும், கழிவுக் காகிதச் சேமிப்புக் கிடங்கு கட்டுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர் திரு.மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் ஆணையர் திருமதி ஏ. சுகந்தி, இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.எஸ்.சரவணன், இ.ஆ.ப., மற்றும்அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்