அனைவருக்கும் வணக்கம். நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இராணுவத்தில் பணியாற்றுவது என்பதை பணியாற்றுவது என்று சொல்ல முடியாது. மக்களைக் காப்பதும் அதன் மூலமாக நாட்டைக் காப்பதுமான மாபெரும் தியாக வாழ்க்கைக்கு ஒப்படைத்துக் கொண்டவர்கள்தான் இராணுவ வீரர்களாக இருக்க முடியும். அத்தகைய தியாகத்தின் திருவுருவங்களாய் உங்களை நான் பார்க்கிறேன். அத்தகைய தியாக திருவுருவங்களை நான் வணங்குகிறேன். வங்கதேசத்து மக்களின் உரிமைக்காக 1971 ஆம் ஆண்டு இந்தியா ஒரு மாபெரும் போரை நடத்தியது. அந்தப் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. அதன் காரணமாகத்தான் வங்கதேசம் உருவானது. அந்த வரலாற்று வெற்றியை நினைவு கூரும் பொன் விழாவை இப்பொழுது நாம் கொண்டாடி வருகிறோம். இந்த பொன் விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன், பூரிப்படைகிறேன், இரட்டிப்பு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன்.
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தபோதும் தமிழ்நாட்டில் திமுக தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது, தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தார்கள். போர் தொடங்கியபோது, அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக அன்றையமுதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சென்றிருந்தார்கள். போர் தொடங்கி விட்டது என்று கேள்விப்பட்டவுடனே உடனடியாக கலைஞர் அவர்கள் தமிழ்நாடு திரும்பினார்கள். கலைவாணர் அரங்கிலே அவருக்கு ஒரு வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரவேற்பு விழாவை இரத்து செய்து அதனுடைய பெயரை மாற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கண்டனக் கூட்டம் என்று அந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பாகிஸ்தானுடைய நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாருடைய அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினார் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள். போரில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியும், விவசாய நிலமும் கொடுத்தார் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள். தமிழ்நாடு முழுவதும் போர் நிதியை வசூலித்து பிரதமர் இந்திராகாந்தி அவர்களை சென்னைக்கே வரவழைத்து 6 கோடி ரூபாயை நிதியாக 1972 ஆம் ஆண்டு வழங்கியவர்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள். அன்றைய சூழலில் ஒட்டுமொத்த இந்தியா முழுக்க வசூலான தொகை 25 கோடி ரூபாய், அதில் தமிழ்நாடு கொடுத்தது மட்டும் 6 கோடி ரூபாய். தமிழ்நாடு மட்டுமே நான்கில் ஒரு பங்கு நிதியை அன்றைக்கு வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது என்பது மறக்க முடியாத ஒன்று.
புதிதாக உருவான வங்கதேச அரசுக்குப் பாராட்டு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டுக்குள் போர் வராவிட்டாலும், தமிழ்நாடும் போர்முனையில்தான் இருக்கிறது என்று முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திலேயே அன்றைக்குச் சொன்னார்கள். அத்தகைய போரின் பொன்விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இந்த விழா கொண்டாடுகிற நேரத்தில், திமுக ஆட்சியில் இருக்கிறது என்பது உள்ளபடியே ஒரு வரலாற்றுப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ‘இமயச் சாரலில் ஒருவன் இருமினான், குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்’ என்று எழுதினார். அதைப்போல, இந்தப் போரில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஏராளமான வீரர்கள் பங்கெடுத்தார்கள். அதில் பலரும் உயிரிழந்தார்கள், காயமடைந்தவர்களும் அதிகம். அந்த மாவீரர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம்குடும்பத்தினருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவர் இராணுவத்தில் இருக்கிறார் என்றால், அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பமே இராணுவத்தில் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இராணுவ வீரரின் குடும்பமானது, அந்த வீரரை வேலைக்கு அனுப்பவில்லை, தியாகத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அனுப்பிவைக்கிறது. இந்த மன தைரியம் எல்லோரது குடும்பங்களுக்கும் வருவதில்லை. அத்தகைய மன உறுதி, தேசப்பற்று, நாட்டுக்காக அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட குடும்பங்களுக்கு நாம் முதலில் மரியாதை செலுத்தியாக வேண்டும். இத்தகைய போர்வீரர்களுடன் சேர்ந்து நான் நிற்பதிலே உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன். இப்போரில் உயிர்நீத்த வீரர்களின் துணைவியருக்கு எனது வீர வணக்கங்கள். அவர்தம் குழந்தைகளுக்கு, அவர்களுடைய வாரிசுகளுக்கு எனது வணக்கங்கள். இதில் பங்கெடுத்துள்ள
பரம் விசிஷிட் சேவா மெடல், உத்தம் யுத் சேவா மெடல்போன்ற பதக்கங்களைப் பெற்றுள்ள தென்மண்டல இராணுவத் தளபதி Lieutenant General திரு. ஏ.அருண் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து, நாட்டைக் காப்பதிலும், முன்னேற்றுவதிலும் தங்களை ஒப்படைத்து வரும் இராணுவ வீரர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். நாட்டைப் பாதுகாத்தல், உள்நாட்டு கலகங்களை அடக்குதல், தேசிய பேரிடர்களிடமிருந்து மக்களைக் காத்தல் ஆகிய இப்பணிகளில் இராணுவ வீரர்கள் திறம்பட செயலாற்றி வருகின்றனர். எல்லைக்குள் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அடித்தளமே இராணுவ வீரர்கள்தான். நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்கள் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாகவி பாரதியார் மொழியில் சொல்வதாக இருந்தால், “ஞானத்திலே,உயர்மானத்திலே, அன்னதானத்திலே, கானத்திலே, கவிதையிலே, உயர்ந்த இந்த நாட்டு தீரத்திலே, படை வீரத்திலே, நெஞ்சில் ஈரத்திலே, உடல் வலிமையிலே, மறத்தன்மையிலே காக்கும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கம்.
நன்றி, வணக்கம்.