கொரோனா பரவல் காரணமாக வடபழநி கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை

வடபழநி ஆண்டவர் கோவிலில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, ஆடி கிருத்திகை விழாவான நாளை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சூரனை அழித்து, தேவர்களைக் காத்த; ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. முருகப்பெருமானுக்கான பிரதான விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை, முருகன் கோவில்களில் விமர்சையாக கொண்டாடப்படும். சென்னை நகரில், வடபழநி ஆண்டவர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா வடபழநி ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். விழாவில் பக்தர்கள் பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும்  வேண்டுதலை நிறைவேற்றுவர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். சமீப நாட்களாக கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆடிக்கிருத்திகை கொண்டாட்டத்தால் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவர். இதனால், கொரோனா பெருந்தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி கிருத்திகையான  நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆகமவிதிகளின் படி, நான்குகால பூஜைகள் நடத்தப்படும். இவ்வாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.