பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி’க்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, இதுவரை 122 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதாகவும், 75 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன், ஐபிஎஸ் அதிகாரிகள் ஜெயராமன், குணசேகரன், வருண் குமார்,டாக்டர் ஆனி விஜயா ஆகியோருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விழுப்புரம் தலைமை மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றம், இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கால அவகாசம் வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்து, வழக்கு விசாரணை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்