இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயலும் ஒன்றிய பாஜக அரசின் ஒருதலைப் பட்சமான அறிவிப்புக்கு எதிராக, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மக்களுக்கும், மின்துறை தொழிலாளர்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிரான மின்துறை ஊழியர்களின் இந்த போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஆதரவினை அளிக்கிறது. மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 3,4,5,6 ஆகிய நான்கு நாட்களில் திட்டமிடப்படுள்ள சுமார் 15 லட்சம் ஊழியர்கள் பங்கு பெரும் போரட்டத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஆகஸ்ட் 1௦ அன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்திலும், மாநில மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தை ஒன்றிய அரசின் கீழ் கொண்டு செல்லும் வகையில் உள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தியும், மின்துறையை தனியார் வசமாக்குவதை கைவிட்டு அதனை பொதுத்துறையாக பாதுகாத்திட வலியுறுத்தியும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தியும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆகஸ்ட் 10ல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிப்பதோடு, ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்வார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன். மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மின் துறை தனியாரின் கைகளுக்குச் சென்றுவிடும். மின் உற்பத்தி, பகிர்வு உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைகளும் பறிக்கப்பட்டு, வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும். தனியார் தலையீடு காரணமாக தொழிலாளா்கள் நலன் பாதிக்கப்படும். ஆகவே, பொதுமக்களுக்கும், மின் வாரியத் தொழிலாளா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏ.கே.கரீம்