சமூக இடைவெளி, முகக் கவசம், நோய் எதிர்ப்பு சக்தி என இப்படி பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இன்றைய உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் அதற்காக ஆனந்தத்தை விட்டுவிட முடியுமா என்கிறது சிங்கப்பூர். தேசியநாள் ஆனந்தம் என்பது ஒவ்வொரு குடிமகனின் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்றல்லவா என்னும் வகையில் சிங்கப்பூர் குடிமக்கள் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி முகநூலில் தேசியநாள் கொண்டாட்டங்களை அரங்கேற்றினர். அந்த வகையில் சிங்கப்பூரில் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மக்களை சிரிக்க வைப்பதிலும் அருமையான நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை மகிழ்விப்பதிலும் மிகவும் புகழ்பெற்ற இளங்கோவன் தன்னுடைய இளங்கோவன புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்ற 9ம் தேதி சிங்கப்பூரின் 56வது தேசிய நாளை தன்னுடைய குழுவினரோடு சேர்ந்து மிகவும் சிறப்பாக கொண்டாடினார். அருவி கொட்டுவதைப் போல் நகைச்சுவை கலந்து பேசி தனிமையில் இருக்கும் மக்களை தகவல் தொழில்நுட்ப வசதியின் துணையோடு சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
சிங்கப்பூர் தேசிய கொடி அலங்கார வளைவுகளில் நிகழ்ச்சி அங்கங்களை அரங்கேற்றினார். மக்களை கூட்டி அரங்கில் நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் கொடுத்த இறைவன் இப்போது எனக்கு தனித்தனியாகச் சென்று கலைஞர்களை சந்தித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து அவற்றை தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியுடன் எடிட் செய்து முகநூலில் ஒரு படமாக ஓட்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளார். என்னால் முடிந்தவரை எனக்கு பக்கபலமாய் இருக்கும் அன்புக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு நிகழ்ச்சிகள் செய்து வருகிறேன் என்று நெகிழ்ந்து கூறுகிறார் சிங்கப்பூரின் நகைச்சுவை இளவல் இளங்கோவன். அவ்வப்போது தன்னால் இயன்ற பொருளாதார உதவியினையும் மதுரை கலைஞர்களுக்கு சத்தமில்லாமல் செய்து வருகிறார் இளங்கோவன். நிகழ்ச்சியில் இடையிடையே சமூகத் தலைவர்களும் பொது மக்களும் சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி சொன்னது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம். நடனமணிகள் ஹேமா, ராஜேஸ்வரி, கலா, லதா ஆகியோரும் பாடகர்கள் முகமது அலி, பிரியா, சுப்ரமணியன், மீனா, நவா, கலா, ராஜன், ஸ்டீவன், ஷியாமளா ஆகியோரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்ததை நன்றியுடன் நினைவுகூர்கிறார் கொரோனா காலத்திலும் ஒரு குதூகல நிகழ்ச்சியை படைத்த சிங்கப்பூரின் பன்முகக் கலைஞர் இளங்கோவன்.