பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்து வெளியிட்ட முதியவர் சென்னையில் கைது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் கொள்கைகளை விமர்சித்து மாற்றுக் கருத்துக்களை தெரிவித்து வந்த சென்னை மாதவரம் பகுதியியை சேர்ந்த மன்மோகன் மிஸ்ரா என்ற முதியவர், தமிழக போலீஸார் உதவியுடன் உ.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் மீது காவல்துறையை கொண்டு அடக்குமுறையை கையாளும் இத்தகைய சர்வாதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

முதியவர் மன்மோகன் மிஸ்ரா, துவக்கத்தில் போலியாக கட்டமைக்கப்பட்ட வளர்ச்சியின் பெயரால் மோடி ஆதரவாளராக இருந்த போதும், மோடி மற்றும் யோகி அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளால் பெரிதும் ஏமாற்றமடைந்தார். இதனை அவர் ஒளிவுமறைவின்றி மக்கள் மன்றத்திலும் வெளிப்படுத்தி வருகின்றார். தான் நடத்திவரும் யூடியூப் சேனல் மூலமாக, மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், கொரோனா கால பேரிடர் நடவடிக்கையில் ஏற்பட்ட மெத்தனம் வரை அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து அவர் வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார். மன்மோகன் மிஸ்ரா தமிழகத்தில் இருந்தாலும் அவர் ஹிந்தி மொழியில் வீடியோ வெளியிடுவதால் வடமாநிலங்களில் குறிப்பாக உ.பியில் பாஜகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் அதிகம் உருவாக்கியுள்ளது. அவரின் ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்நிலையில், விரைவில் உ.பி.யில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மன்மோகன் மிஸ்ராவின் விமர்சனம் பாஜகவுக்கு எவ்வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, அவரை சென்னையில் இருந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது உ.பியின் யோகி ஆதித்யநாத் அரசு.

உ.பியில் தனது ஆட்சிக்கு எதிராக எந்த விரலும் நீளக்கூடாது என்ற கங்கணப் பார்வையில் சர்வாதிகாரம் செலுத்திவரும் யோகி ஆதித்யநாத் அரசு, ஆட்சியை விமர்சிப்பவர்களை தேசவிரோதியாக சித்தரித்து சிறையில் அடைத்து வரும் நிலையில் தான், முதியவர் மன்மோகன் மிஸ்ரா தமிழத்திலிருந்து பாஜக ஆட்சியின் தவறான நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து வீடியோ வெளிட்டு வந்துள்ளார். ஏனெனில் தமிழகம் கருத்து சுதந்திரத்தை காக்கும் மாநிலம் என்ற அடிப்படையில் தனது மாற்றுக் கருத்துக்களை அவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். ஆனால், அவர் எண்ணத்திற்கு மாறாக, உ.பி. அரசின் காவல்துறைக்கு உதவி மன்மோகன் மிஸ்ராவின் கைதுக்கு உதவியுள்ளது தமிழக காவல்துறை. உ.பி. பாஜக அரசின் சர்வாதிகார போக்கிற்கு துணைபோன இந்த நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல.

உ.பியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் காவல்துறை உள்பட அனைத்து ஜனநாயக அதிகார அமைப்புகளும் சர்வாதிகாரமாக மாற்றப்பட்டு விட்டது. சர்வாதிகார அமைப்பு என்பது ஆட்சியாளர் விருப்பப்படி நடக்கும் ஒரு அரசின் வடிவம் ஆகும். ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் உரிமையும், குறை கூறும் உரிமையும் மக்களுக்கு உண்டு. ஆனால், சர்வாதிகாரத்தில் மக்கள் ஆட்சியாளருக்கு கட்டுப்படுதல் மட்டுமே உண்டு. குறை கூறும் உரிமையோ அல்லது விமர்சிக்கும் உரிமையோ இல்லை. அத்தகைய மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி நாடு நகர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதன் அடையாளமே முதியவர் மன்மோகன் மிஸ்ரா போன்றவர்களின் கைது நடவடிக்கையாகும்.

வளர்ச்சி என்ற வாக்குறுதியின் பேரால் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன், மக்களுக்கு சேவை செய்யும் எண்ணங்களை துறந்து, தனது சித்தாந்த ரீதியில் பழி வாங்கும் சர்வதிகார சிந்தனை கொண்ட அரசியல் முற்றிலும் ஆபத்தானது.  இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆகவே, முதியவர் மன்மோகன் மிஸ்ராவை உ.பி. அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக அரசும் முதியவர் மிஸ்ராவை தமிழகம் அழைத்துவர  நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய சர்வாதிகார போக்கிற்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

ஏ.கே.கரீம்