காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், ஒருவர் கடுமையாக வயிற்றை கிழித்துக்கொண்டும், இருவர் தூக்கிட்டுக்கொண்டும் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருப்பது பெரும் கவலைக்கும் வேதனைக்கும் உரிய விடயம்.
நேரடியாகவும் அறிக்கையின் மூலமாகவும் இன்னும் எத்தனை முறைதான் நாங்கள் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அவலங்களை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது? தமிழ்நாடு கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களிடம் நேரில் சென்றும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் மஸ்தான் அவர்களின் பார்வைக்கும் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். அரசின் சார்பாக அகதிகள் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் சென்னையிலிருந்து திருச்சி சிறப்பு முகாமிற்கு நேரில் சென்று அங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எம் ஈழத் தமிழர்களை சந்தித்து 20 நாட்களில் விடுதலை செய்கிறோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு 30 நாட்கள் கடந்த பிறகும் கூட அவர்களை விடுதலை செய்வதற்கான முகாந்திரமே ஏற்படுத்தப்படவில்லை என்கிற நிலையில்தான் கசப்புணர்வோடு, கனத்த மனதோடு அவர்கள் இந்த உயிர் கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். ஒருபோதும் இதுமாதிரியான போராட்ட வடிவத்தை யாம் ஆதரிக்க முடியாது. வாழ்வதற்குத்தான் போராட வேண்டுமே தவிர சாவதற்காக போராடுவதை மனிதகுலம் ஏற்காது. என்றாலும் கூட வாக்குறுதி கொடுத்த அரசு மீண்டும் மீண்டும் காலம் தாழ்த்துவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது நேர்மையற்றது. சில உயிர்களை காவு வாங்கிய பிறகுதான் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவின் கொடூர குணத்திற்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டுவதாகத்தான் அது அமையும். காலம் தாழ்த்தப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிதான். ஆகையினால் இனியும் காலம் தாழ்த்தாமல் கருணை மனதோடு விடுதலைக்கு தகுதியான எம் ஈழத்தமிழர்களை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசினை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.