மாண்புமிகு *எஸ்.இரகுபதி* அவர்கள்,
சட்டத்துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு.
வணக்கம்.
கடவுச்சீட்டு வழக்கில் தண்டனைக் காலத்தைத் தாண்டியும் நீண்ட நெடுங்காலமாக சிறையிலிருக்கும் தங்களை விடுதலை செய்யக்கோரி பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்தும், தங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்கள் 16 பேர், 18.08.2021 புதன்கிழமை அன்று அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டும், அதில் ஒருவர் தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டும், இருவர் அங்குள்ள மரக்கிளையில் தூக்கிலிட்டுத் தற்கொலைக்கு முயன்றதுமான துயர நிகழ்வுகளைத் தாங்களும் அறிந்திருப்பீர்கள்.
இந்நிகழ்விற்கு முன்பே, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதியிலிருந்து ம.நிரூபன் (வயது 27), செ.முகுந்தன் (வயது 26) ஆகிய இருவரும் உணவு அருந்தாமல் தங்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டி, சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி இன்றோடு
14-ஆம் நாளைக் கடக்கிறது. அவர்களோடு இணைந்து மேலும் இருவர் உண்ணாநிலை போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். முதலில் தூக்க மாத்திரை உண்டு தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான 16 பேரும், 19.08.2021 அன்று மீண்டும் தூக்க மாத்திரை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் வேதனைக்குரிய நிகழ்வு.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய 32 ஈழத்தமிழர்களும் காத்திருப்பு போராட்டத்தைத் தொடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து ஏற்கனவே சிறப்பு முகாமில் இருக்கிற 40க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களும் இப்பொழுது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
2016 -ஆம் ஆண்டு இதே கடவுச்சீட்டு வழக்கில் ஆறு ஈழத்தமிழர்களை தமிழ்நாடு அரசு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. இதே நிலைப்பாட்டினை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போது இந்த 48 ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் சந்தேகமிருப்பின் விடுதலை செய்யப்படும் அனைவரையும் அவர்களின் குடும்பத்தோடு தங்கியிருக்கும் அகதிகள் முகாம் அருகில் இருக்கிற காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ கையெழுத்திட்டு அவர்களைக் கண்காணிக்கலாம் என்பதையும் ஒரு ஆலோசனையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடுமையான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்த நிலையில், சென்னையிலிருந்து அகதிகள் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் நேரடியாக திருச்சிக்கு சென்று, விரைவில் அவர்களுக்கான விடுதலை கிடைக்கும் என உறுதி கூறி வந்த நிலையில், மீண்டும் கால தாமதப்படுத்துவதால்தான் அவர்கள் இந்த தற்கொலை முயற்சியினை மேற்கொண்டார்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஒரு போதும் தற்கொலையை ஆதரிக்க முடியாது; ஊக்குவிக்கவும் முடியாது. அதே நேரத்தில் எத்தனையோ முறை அவர்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், மன உளைச்சலில், வேதனையின் விளிம்பில்தான் இந்த முடிவை மேற்கொண்டார்கள் என்பதைக் கவனத்தோடு தாங்கள் கணக்கிலெடுத்து மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களோடு கலந்தாலோசித்து தாயன்போடு அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக தங்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
*வ.கௌதமன்*
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி