தாய் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(56). இவர் பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் தாய் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 16 ஆம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வந்தனர். அதே நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் பார்த்தசாரதி மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கட்சியில் இருந்து பார்த்தசாரதி நீக்கப்படுவதாக கடந்த 4ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து பார்த்தசாரதியின் செல்போன் சிக்னலை வைத்து அவரை தேடி வந்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கொடுங்கையூர் எஸ்.ஐ. கன்னியப்பன் தலைமையிலான போலீசார் நேற்றிரவு ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிக்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் பார்த்தசாரதி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து கிராம மக்களிடம் பாலியல் விவகாரம் தொடர்பாக போலீசார் கூறினர். பொது மக்கள் உதவியுடன் பார்த்தசாரதியை போலீசார் நேற்றிரவு மடக்கி பிடித்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இச்சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.