ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்தார்

விவசாயிகளுக்கு எதிராக அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருந்தது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்டாகக் கொள்ளாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டத்தில் கடுங்குளிருக்கு பல விவசாயிகள் இறந்துள்ளனர். டெல்லி மட்டுமின்றி, இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு, மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறுவணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாட்டிலும் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதோடு, போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. ஆனாலும், 3 வேளாண் சட்டத்தினை திரும்பப்பெற முடியாது திருத்தங்கள் செய்கிறோம் என அடாவடித்தனம் செய்து வருகிறது மோடி அரசு. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டம் என்பது அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன கொள்ளையர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என  அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை வரவேற்கதக்கது. இத்தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற அவசரகால அடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையை கூட்ட வேண்டும். மேலும், கேரளா, அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் என ஒருமித்த கருத்துள்ள மாநிலங்களை ஒன்று திரட்டி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இதனிடையே, வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும்  சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் நான் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது வலியுறுத்தியிருந்தேன்.  அக்கோரிக்கையை ஏற்று விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்துள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.