முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஏதோ எங்களை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு நீங்கள் அந்தக் கருத்தைச் சொல்கிறீர்களா’ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பினார். இந்தத் தீர்மானத்தில்கூட ‘ஒருமனதாக’ என்றுதான் போட்டிருக்கிறோம். நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ளவாசகத்தைக்கூடப் பார்க்கலாம். அந்தத் தீர்மானத்தினுடைய வாசகத்தில் ‘ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றுதான் சொல்லியிருக்கிறோம். ஆனால், இருந்தாலும் பி.ஜே.பி. உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அதனால், சபையில் இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துத்தான், ‘ஒருமனதாகவா’ அல்லது ‘பெரும்பான்மையாகவா’ என்று கணக்குப்போடமுடியும். ஆதலால், இதை ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையா என்பதை மாத்திரம் நம்முடைய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அவர்கள் சொல்ல வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாங்கள் எப்போதும் உழவர் பக்கம்தான் இருப்போம்; உழவர்களுக்காகப்போராடுகிறோம்; பாடுபடுகிறோம் என்றெல்லாம் சொன்னீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். பிறகு, நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, ஏன் இதை எதிர்த்து அல்லது திரும்பப்பெற வேண்டுமென்று ஒரு தீர்மானத்தைநிறைவேற்றவில்லை? பல மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்டமன்றங்களில் தீர்மானம் போட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி) ஆனால், உழவர்கள் பக்கம் நாங்கள் எப்போதும் இருப்போம், இருப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்கக்கூடிய நீங்கள், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு ஏன் தயங்கினீர்கள்? அதில் என்ன தயக்கம்? ஆதலால், நீங்கள் செய்ய முடியாததை, இப்போது நாங்கள் செய்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி) அதனால் இதை நிறைவேற்றித் தரும்படிக்கேட்டுக்கொள்கிறோம்.
அண்மையில் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு, டெல்லிக்குச் சென்று பிரதமரைச்சந்தித்தபோது, இதைப்பற்றித் தெளிவாகச்சொல்லியிருக்கிறேன். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அப்போதே சொல்லியிருக்கிறோம். இதுவரை அதற்கு எந்தவிதமான பதிலும் கிடையாது. ஆகவே, இதற்கிடையில்தான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் நேரத்தில் நாங்கள் மக்களிடத்தில் வாக்குறுதி அளித்திருந்தோம். எங்களது வாக்குறுதிகளில் அதுவும் ஒன்று. (மேசையைத் தட்டும் ஒலி) திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், விவசாயிகளுக்காகச்சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டு வருவோம்; போராடுகிற விவசாயிகளே எங்கள்மீது நம்பிக்கைவைத்திருக்கிறார்கள். எனவே, இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டுமென்று தீர்மானத்தைச்சட்டமன்றத்திலே கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையிலே சொல்லியிருக்கிறோம். நாங்கள்அளித்த உறுதிமொழிகளைத்தான் தொடர்ந்து படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். எனவே, இதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி, பணிவோடு, உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)