2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்தார். பாரம்பரிய எண்ணெயைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை. தர்ஷன், ரஷ்மிகா மந்தனா மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கர்நாடகா முழுவதும் 100-நாட்களுக்கு மேல் ஓடியது.
2011 ஆண்டு வெளியான ‘விஷ்ணுவர்தனா’ மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன்குமரன். இந்த படத்திற்கு அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது. பொன்குமரன், தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சாருலதா படத்தையும் இயக்கியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கி ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் கதையை பொன்குமரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நடிகர்களை வைத்து பொன்குமரன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி வினோத் ஜெயின் தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.