வறுமையின் விளிம்பிலிருக்கும் இயக்குனர் ராஜசேகரின் மனைவி முதல்வரின் உதவியை நாடுகிறார்

‘ராபர்ட்- ராஜசேகர் என்றால் கோலிவுட் அறியும். ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகராக பாரதிராஜாவின் ஹீரோ எனப் பல முகங்கள் கொண்ட இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே செப்டம்பரில் காலமானார்.

இவரது மனைவி தாரா. இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. ராஜசேகரன் இறப்பதற்கு முன் சென்னை வடபழனியில் லோன் போட்டு ஒரு ஃபிளாட் வாங்கியிருந்தார். சினிமாவில் ஓரளவு சம்பாதித்த காலங்களில் சகோதரிகளின் திருமணம் உள்ளிட்ட குடும்பத் தேவைகளால் பெரிதாகப் பணம் சேர்த்து வைக்கவில்லையாம்.

தற்போது ராஜசேகரன் இல்லாத நிலையில், வீடு வாங்கிய கடனைக் கட்டச் சொல்லி வங்கி நெருக்கடி தர, வேலையும் இல்லாமல், கடனையும் கட்ட வழி தெரியாத நிலையில் பரிதவித்து வருகிறார் தாரா.

”சினிமாவிலோ சீரியலிலோ என் கணவர் மாதிரி இன்னைக்கும் நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் என் கதை ஒரு பாடமா இருக்கணும்னு ஆசைப்படறேன். நடிப்பு எல்லா நேரமும் காசு தந்துட்டே இருக்காது. அதனால கிடைக்கிறப்ப சேர்த்து வச்சாதான் தனக்குப் பின்னாடி தன்னுடைய குடும்பம் நிம்மதியா இருக்கும்னு அவங்க நினைச்சுப் பார்க்கணும்.

கையில கொஞ்சம் காசு இருந்தப்ப என் கணவர் அக்கா தங்கச்சிகளுக்கு நிறைய செலவழிச்சார். அவருடைய தங்கை நிரஞ்சனாவை எம்.ஜி.ஆர் வீட்டுல அவரது வளர்ப்பு மகளான ராதாவின் மகனுக்கு மணம் முடிச்சுக் கொடுத்தப்பெல்லாம் நிறைய செலவு பண்ணினார். தனக்குனு வீடு வாசல்னு எதுவும் சேர்த்து வைக்காம இருந்துட்டார்.

சினிமாவுல வாய்ப்பு குறைஞ்சு சீரியல் பக்கம் வந்தப்ப வருமானமும் குறைஞ்சிடுச்சு. அப்பத்தான் மனுசனுக்கு தனக்கொரு வீடு வேணும்னும், தன் காலத்துக்குப் பிறகு பொண்டாட்டிக்கு சாப்பாட்டுக்கு வழி வேணுமேன்னு யோசிக்கத் தோணியிருக்கு.

ஆனா கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் கதைதான். காலம் போன கடைசியில லோன் போட்டு வீட்டை வாங்கினவருக்கு அந்த வீட்டுல ஒரு நாள் கூட வசிக்கக் கொடுத்து வைக்கலை. கிரகப்பிரவேசம் பண்றதுக்குள்ளேயே இறந்துட்டார். கடைசிக் கட்ட மருத்துவச் செலவுக்குக்கூட கையேந்தற நிலையிலதான் நான் இருந்தேன்.

சொந்த பந்தங்கள் அவர் இருந்தப்பவே உதவலைன்ன போது இப்ப எப்படி உதவுவாங்க? சினிமாவுல, சீரியல்ல இருந்திருக்காரேன்னு டைரக்டர் சங்கம், டிவி நடிகர் சங்கம்னு போய் ஏதாச்சும் உதவ முடியுமான்னு கேட்டேன். எங்கேயும் எந்தத் தீர்வும் கிடைக்கலை.

அவர் கடனை வாங்கி வச்சுட்டுப் போனா யார் கட்டுவாங்கன்னு சாதாரணமா சிலர் கேட்டுட்டாங்க.

உண்மைதான். ஆனா, எனக்கு என்ன ஆதங்கம்னா, அன்னைக்கு அவர் கடன் கேட்டப்ப, ‘இவ்ளோ வயசுல கடன் கேக்காரே, எப்படித் திருப்பிக் கட்டுவார்’னு கடன் கொடுத்த வங்கி யோசிச்சிருக்கலாம். அன்னைக்கு ‘பிடி கடனை’னு தந்துட்டு இப்ப தினமும் விடிஞ்சா எங்கிட்ட வந்து கடனைக் கட்டுன்னு நிக்கிறாங்க.

நான் சாப்பாட்டுக்கே என்ன செய்யறதுனு நிக்கிறப்ப கடனை எதை வச்சுக் கட்டறது?

அதேபோல சினிமா, டிவியில இருக்கிற சங்கங்களுக்கு ஒரேயொரு கேள்விதான். உங்க துறையிலதான் இருந்தார். அந்த மனுஷனுடைய‌ பொண்டாட்டி ஆதரவில்லாம கஷ்டப்படறப்ப உங்கள்ல நாலு பேர் சேர்ந்து எனக்கு ஏதாச்சும் உதவலாம். நலிந்த கலைஞர் பென்சன்னு என்னென்னவோ வழி இருக்கே, குறைந்தபட்சம் அந்த மாதிரி உதவியையாச்சும் செய்யலாமே, ஆனா என்ன ஏதுன்னு காது கொடுத்தே கேக்க மாட்டேங்கிறீங்களே! ரொம்ப வருத்தமா இருக்குங்க.

எந்த உதவியும் கிடைக்காததால வேற வழி இல்லாம அவரு ஆசையா வாங்கின வீட்டை இப்ப அவரு கடைசியா நடிச்ச ‘சத்யா’ சீரியல் தயாரிப்பாளருக்கு வாடகைக்கு விட்டுட்டேன். கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து நான் இருக்கேன். அவரு தர்ற வாடகையிலதான் பாதி என் வீட்டு வாடகைக்கும் மீதி வயித்துக்கும் போகுது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பொழப்புன்னு தெரியலை” என்ற தாரா, நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறார்.

“முதலமைச்சர்கிட்ட என் பிரச்னையைக் கொண்டு போக பல தடவை நினைச்சேன். ஆனாலும் ஒரு மனு எழுதித்தரக் கூட ஆள் ஆதரவில்லாத நிலையிலதான் நான் இருக்கேன். அதனால முதலமைச்சர் என்னுடைய பிரச்னையைக் கவனிச்சு ஏதாச்சும் ஒரு நல்ல தீர்வு கிடைச்சு வயசான காலத்துல எனக்கு நிம்மதி கிடைக்கச் செய்யணும்னு கேட்டுக்க விரும்பறேன்” என்கிற கோரிக்கைதான் அது.