இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தீவில் நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அந்த தீவில் உள்ள சுமார் 400 குடியிருப்புகள் மட்டுமின்றி ஏராளமான விளைநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மிகச்சிறிய தீவில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது அந்த தீவில் வசிக்கும் மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் அதேபோல் தீவின் இயற்கையான பாதுகாப்புச் சூழலும் பாதிக்காத வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால், பாம்பன் தீவில் திட்டமிடப்பட்டிருக்கும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டமானது மக்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, இயற்கையான கடல்நீரோட்டத்தை தடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக சூழலியல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தீவின் தற்போதைய இயற்கையான கடல் நீரோட்ட சூழல் தான் பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதிலும் பாம்பன் தீவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததற்கு முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, மிகச்சிறிய தீவில் வாழும் மீனவ மக்களின் குடியிருப்புகளை காலி செய்யும் வகையிலும் இந்த நான்கு வழிச்சாலை திட்டம் உள்ளதால், முழுக்க முழுக்க தீவை சார்ந்து தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே, லட்சத் தீவை தனது அதிகாரப் பலத்தின் மூலம், வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அந்த தீவு மக்களின் உரிமையையும், தீவின் இயற்கையான சூழலையும் கெடுக்கும் வகையில் அந்த தீவை கபளீகரம் செய்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது தமிழகத்தின் பாம்பன் தீவிலும் வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் இதுபோன்ற திட்டங்களை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆகவே, பாம்பன் தீவு மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்தால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விவகாரத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏ.கே.கரீம்