வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ஃப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ஃப் கண்காணிப்பளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அளிக்கும் தடையில்லா சான்றிதழ் (என்.ஒ.சி) அமைந்துள்ளது என்றும் வக்ஃப் வாரிய ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் விலக்கி கொள்ளப்பட்டு என்.ஒ.சி அளிக்கும் முறையை உரிய வகையில் அரசு திருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டல் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் முதன்மை செயலாளர் திரு. ஏ.கார்த்திக் இ.அ.ப. அவர்கள் பதிவுத் துறைத் தலைவருக்கு பின்வரும் கடிதத்தை செப்டம்பர் 22 அன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “தமிழ்நாட்டில் 7452 வக்ஃப் நிறுவனங்களுக்கு சொந்தமான 53,834 சொத்துகள் உள்ளன. இச்சொத்துகளில் அதிகமானவை ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது சட்டவிரோதமாக வகை மாற்றும் செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் நிறுவனங்களின் வசம் உள்ள சில சொத்துகளின் பட்டாக்கள் மூன்றாம் நபர் பெயரில் உள்ளன. வக்ஃப்  சட்டம் 1995ன் பிரிவு 51 (1ஏ) வை பிரிவு 104ஏ உடன் சேர்ந்து பார்க்கும் போது வக்ஃப் சொத்தை விற்பது அன்பளிப்பாக அளிப்பது அல்லது பரிமாற்றம் செய்வது, அடமானம் வைப்பது அல்லது பெயர் மாற்றம் செய்வது அப்பரிவர்த்தனையின் தொடக்கத்திலிருந்தே செல்லதக்கது அல்ல. “வக்ஃப் சட்டத்தின் 40ம் பிரிவின் படி ஒரு சொத்து வக்ஃப் சொத்தா அல்லவா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வக்ஃப் வாரியத்திற்கே உண்டு. “மேலும் பொது சொத்துகள் (சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும்) சட்டம் 1975ன் படி வக்ஃப் சொத்துகள் பொது சொத்துகள் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. பதிவு சட்டம் 1908ன் படி வக்ஃப் சொத்துகள் விற்பனையை பதிவுச் செய்வது தடைச் செய்யப்பட்டுள்ளது. “வக்ஃப் ஆய்வாளர்களும், வக்ஃப் கண்காணிப்பாளர்களும் அளிக்கும் தடையில்லா சான்றிதழ் (என்.ஒ.சி) அடிப்படையில் வக்ஃப் சொத்துகள் வகை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

“எனவே வக்ஃப் வாரியத்தின் ஊழியர்கள் அளித்த தடையில்லா சான்றிதழின் அடிப்படையில் விற்பனை பதிவிற்காக வரும் எந்தவொரு வக்ஃப் சொத்து தொடர்பான பத்திரத்தையும் பதிவுச் செய்ய வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். உரிய முறைமைகளை பின்பற்றி தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும். இது தொடர்பாக உங்கள் அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

வக்ஃப் சொத்துகள் பறிபோவதற்கு முக்கிய காரணிகளாக வக்ஃப்  கண்காணிப்பாளர்களும், ஆய்வாளர்களும் தடையில்லா சான்றிதழ் அளித்தது தான்  பெரிதும் காரணமாக இருந்தது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வீற்றிருந்த அவையில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதில் திமுக அரசிற்கு பெரிதும் அக்கறை உள்ளதை நிரூபிக்கும் வகையில் வக்ஃப்  சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்வதற்கு இருந்த ஊற்றுக்கண்ணை அடைத்தற்காக தமிழக முஸ்லிம்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி