உத்திரப்பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பத்திரிக்கையாளரென 8 பேர் பச்சைப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. அதிகாரத்திமிரில் அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, உணவளிக்கும் விவசாயிகளைக் கொன்றொழித்த இக்கொடுஞ்செயல் ஒட்டுமொத்த நாட்டையே வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது. விவசாயிகளின் இலாபத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவோமென வாக்குறுதி அளித்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த பாஜக அரசு, அரச வன்முறையை ஏவிவிட்டு அப்பாவி விவசாயிகளைத் தாக்குவதும், சுட்டுக்கொல்வதுமென ஈவிரக்கமற்ற கோரச்செயல்களை நிகழ்த்துவது கொலைவெறி பிடித்த பாசிச ஆட்சியின் உச்சமாகும். இதற்கு எனது கடும் எதிர்ப்பினையும், வன்மையானக் கண்டனத்தையும் பதிவுசெய்கிறேன். மனிதத்தன்மையே அற்ற கொடுங்கோலர்கள் கைகளில் நாடும், மக்களும் சிக்குண்டு, நாளும் வதைபடுவதும், அரசின் வன்முறை வெறியாட்டத்துக்கும், படுகொலைகளுக்கு உள்ளாவதும் வெட்கக்கேடானது. பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடம் சிக்குண்டிருக்கும் நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போரை சனநாயக வழியில் நடத்திட நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டியது வரலாற்றுப்பெருங்கடமையாகும். இக்கலவரத்திற்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவைப் பதவிநீக்கம் செய்து, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், ஆஷிஷ் மிஸ்ராவை கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.