நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

பருவ மழை துவங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக வேப்பேரி, நந்தனம், கிங்ஸ் இன்ஸ்டியூட் சமுதாய கூடம், சோழிங்கநல்லூர் பி.கேனல், எல்காட், ஒக்கியம் மடுவு-ஒக்கியம் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை, நாராயணபுரம் ஏரி, வீராங்கல் ஓடை, வேளாச்சேரி ஏரி மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து நடைபெறும் பணிகளை துரிதப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையால் 270கி.மீ நீளமுள்ள சாலைகளும், 303கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்களும் உள்ளது. 1041 பெரியமற்றும் சிறுபாலங்களின் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நீர்வழித்தடங்கள் அனைத்தும் தற்போது சுத்தம் செய்யும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.  இரயில்வே கீழ்பாலங்களின் மழைநீர் சேகரிக்கும் கிணறுகளும் தூர்வாரப்பட்டுள்ளன.  மேலும், மழைநீரால் பாதிப்படையும் 41-இடங்கள் கண்டறியப்பட்டு, 47-நீர்இறைப்பிகள் (Pumps) தயார் நிலையில் வைக்கவும்  மற்றும் 1-மினி லாரி,                   10-பணியாளர்கள் மற்றும் சிறு டீசல் பம்புடன் கூடிய 20-மொபைல் டீம், சுழற்சி முறையில் மழைக்காலங்களில் பணியமார்த்தப்படும்.  மேலும், 30 பொக்லைன் மற்றும் ஜெ.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தியும், சாலைகளில் மழைநீர் தேங்காவண்ணம் கண்காணிக்கப்படும். வேப்போரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே மழைநீர் தேங்குவதை தடுக்கவும், அதை உடனடியாக வழிந்து டிட வசதியாக 3-சிறுபாலப்பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  மேலும், இரண்டு பணிகள் ரூ.3.95 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.  பல்லாவரம்-துரைபாக்கம் சாலையில் கீழ்கட்டளை முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி வரை கட்டப்பட்டு வரும் பெரிமழைநீர் வடிகால்வாய் பணி ரூ.8.50 கோடிமதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளான மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் ஆகிய 37-பணிகளுக்கு ரூ.212 கோடி நிதி, மாண்புமிகு முதல்வர் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர் மழை நீரினை அகற்றிட பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியிலிருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு மழைநீர் செல்லும் வகையில் பல்லாவரம்-துரைபாக்கம் சாலையில் 2.40 கி.மீ. நீளத்திற்கும்  4.20x2.30மீ. அளவிற்கு இரண்டு கண்கள் கொண்ட பெரிய மழைநீர் வடிகால்வாய் ரூ.70 கோடியில் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் விரைவில் கோரப்படும்.

மேடவாக்கம்-சோழிங்கநல்லுர்குடுமியாண்டிதோப்பு சாலையில் புதியநீர் வடிகால் வழித்தடம் உருவாக்கும் பொருட்டு முகமது சதக் கல்லூரியிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை 1.70 கி.மீ நீளத்திற்கு  6 மீ. x3மீ. அகலம் கொண்ட பெரிய மழைநீர் வடிகால்வாய் ரூ.47.25 கோடியில் அமைக்கும் பணி விரைவில் ஒப்பந்தம் கோரப்படும்.  2015ம் ஆண்டு கனமழையின் பொழுது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு சென்னை தத்தளித்ததை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில், சென்னை மாநகரம் முழுவதும் துரித பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1) சென்னை-கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில், சென்னை புறநகர் பேருந்து நிலையம் நுழைவு மற்றும் காளியம்மன் கோவில் தெரு சந்திப்பினை,இணைத்து ஒரு மேம்பாலப்பணியும், 2)சென்னை, வேளச்சேரி பகுதியில் விஜயநகரம் அருகில் தரமணி சாலையில், தாம்பரம் சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலமும், ஆகிய இரண்டு மேம்பாலங்களையும், 2010ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர்ஆட்சியிலேயே கட்ட திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த பத்தாண்டு கால  ஆட்சியில் இதை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை. தற்போது, இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர்தான் இந்த இரு பாலப்பணிகளையும்,விரைவுப்படுத்தி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.” இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாய்வின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த ரமேஷ், JMH அஷான் மௌலானா, நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர்             செந்தில், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர்  விஸ்வநாத் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.