ரூ.2.68 கோடி மதிப்புள்ள தங்கம் & மின்னணுச் சாதனங்கள் பறிமுதல், ஐந்து பேர் கைது

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.2.68 கோடி மதிப்பிலான 5.06 கிலோ தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைதுசெய்துள்ளனர்.

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்துஅக்டோபர் 20 அன்று காலை 8.40 மணிக்கு சென்னை வந்திறங்கிய பத்து ஆண் பயணிகளைவெளியே செல்லும் வாயிலில் சுங்க அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.

அப்போது, உபயோகப்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் டேப்லட்டுகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டத் தங்கத் தகடுகள் கண்டறியப்பட்டது. இதன் மொத்த எடை 5.06 கிலோ என்றும் சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ.2.19 கோடி என்றும் அதோடு ரூ.48.06 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக ஐந்து பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மைச் சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.