நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை,  கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறாா்கள். ஆனால், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிற்கு என தனிக்கொடி உருவாக்கப்படவில்லை. 1970-களில் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை விடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியவில்லை. 
 
 இந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை கடக்கும் நிலையில், கலைஞர் அவர்களின் தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்ற கனவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். இதன் காரணமாக தான், அரசு அமைப்புச் சட்டம் யூனியன் ஆஃப் இந்தியா என்று குறிப்பிடுகின்றது. அதன் அடிப்படையில் தான், திராவிட முன்னேற்றக் கழகம் பதவியேற்றதில் இருந்து, இந்திய அரசை ஒன்றிய அரசு என நாம் கூறி வருகிறோம். அதே இந்திய அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு தான், தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. ஏற்கனவே பெரியாரிய உணர்வாளர்கள்  கூட்டமைப்பு, தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சாதியாலும், மதங்களாலும் மக்களை பிரித்து தமிழ்நாட்டிற்கு எப்படியாவது காலுன்றி விடலாம் என  பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சும் நினைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள் தனிக்கொடி உருவாக்கப்படுவதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. 
தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு கிடையாது. எனவே, நவம்பர் 1ம் தேதியை, தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாடப்பட வேண்டும். மேலும், தமிழர்களின் தொன்மையும், வரலாற்றையும் பறைசாற்றும் வகையில் தமிழ்நாட்டிற்கு தனிக்கோடியை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இதற்காக, அரசியல் கட்சிகளையும், அரசியல் இயக்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்துவதோடு, தனிக்கொடியை உருவாக்குவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.