திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறையைத் தடுப்பதற்கு மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து ஊக்குவிக்கிறது. வன்முறைக்கு இலக்காகி முஸ்லிம்களையே குற்றம்சுமத்தி கைது செய்கிற கொடுமையும் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பள்ளிவாசல்களை மதவெறிக் கும்பல் பாஜக அரசின் பாதுகாப்போடு தீக்கிரையாக்கியுள்ளது. முஸ்லிம்களின் மூன்று வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. 27 வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் முழக்கங்களை பொதுவெளியில் முழங்கியபடி கலவரக் கும்பல் ஊர்வலம் நடத்துகிறது. சங்பரிவார அமைப்புகளே கலவரத்தைத் திட்டமிட்டு இயக்கி வருகின்றன. வடதிரிபுராவில் சுமார் 20 ஆயிரம் முஸ்லிம்கள் ஜனநாயக வழியில் கண்டனப் போராட்டம் நடத்திய பிறகு அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் கலவரக்காரர்களின் வன்முறை வெறியாட்டங்களின் போது எந்தவித தடையுத்தரவும் போடப்படவில்லை.
காட்டுமிராண்டித் தனமான இந்த வன்முறைகளைக் கண்டித்தும், ஒன்றிய அரசு உடனடியாகத் இப்பிரச்சினையில் தலையிட்டு தீப்பற்றி எரியும் திரிபுராவில் கலவரத்தை ஒடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பள்ளிவாசல்களையும் வீடுகளையும் அரசே கட்டிக்கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்திக் சென்னை சேப்பாக்கத்தில் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தோழர். ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் திருமலை, தமுமுக துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது,தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, தமுமுக மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே.அப்துல் சலாம், வடசென்னை மாவட்ட தலைவர் நசுருதீன், தென்சென்னை (மேற்கு) மாவட்ட தலைவர் அபூபக்கர் கோரி உள்ளிட்ட ஏராளமான தமுமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.