அறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்ற பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றினார். அந்த நாளை யாரும் பெரிய விழாவாகக் கொண்டாடவில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1ஆம் தேதியை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு என்று பெயர் இடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பட்டினிப் போர் நடத்தி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாகத்தின் அடிப்படையில் 1967 ஜூலை 18 அன்று உருவான தமிழ்நாடு என்ற ஆட்சி ரீதியான பெயர் சூட்டப்பட்ட நாள் போற்றப்பட வேண்டிய நாளே. மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1ஆம் தேதியும் கொண்டாடப்பட வேண்டிய நாளே. எனவே ஜூலை 18ஆம் தேதியும் நவம்பர் 1ஆம் தேதியும் தமிழ்நாடு நாளாக கொண்டாடி மகிழ்வதே சிறப்பு. தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்ட கொடிக்கால் சேக் அப்துல்லா உள்ளிட்ட ஈகியர்கள் 110 பேருக்கு தலா ஒரு லட்சம் பொற்கிழி இன்று (நவம்பர் 1 அன்று) வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.