இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசு மூலம் மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தில், தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான வசிப்பிடம் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான இத்தகைய தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதாலேயே, கடந்த ஆண்டு எழுந்த எதிர்ப்பின் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இத்தகைய கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று அறிவித்தன. இந்த எதிர்ப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைபெற இருந்த கணக்கெடுப்பு கால வரையின்றித் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து மீண்டும் கணக்கெடுப்புக்கான பணிகளை ஒன்றிய அரசு துவங்க உள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு எழுந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் மீண்டும் தாய்மொழி, தாய், தந்தையர் பிறந்த இடம், கடைசியான வசிப்பிடம் ஆகியவை தொடர்பான கேள்விகள் அடங்கிய படிவத்தையே மாவட்ட மக்கள் தொகை அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மக்கள் தொகை பதிவேட்டுக்கான தகவல்களும் சேகரித்து பதிவு செய்யப்பட்டன. அதன் பின்னர் 2015ல் வீடு வீடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. இந்த பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் பணியும் முடிந்துள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் என்பிஆர் குறித்து ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளும், அதோடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெற்றோர் பிறப்பு குறித்து கூடுதலாக கேட்கப்படும் கேள்விகளும் மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (என்.பி.ஆர்.) புதிப்பிக்கப்படுவதன் உள்நோக்கம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி.) மறைமுகமாக அமல்படுத்துவதே அல்லாமல் வேறு எதுவுமில்லை என்பதுவும் தெளிவாகிறது.
ஆகவே, வழக்கத்துக்கு மாறாக கேள்விகளை கொண்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (என்பிஆர்) புதிய படிவத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். இதற்கெதிராக அனைத்து ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்,1969-ஐ ஒன்றிய பாஜக அரசு திருத்த முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த திருத்தமானது மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை பறித்து ஒன்றிய அரசிடம் அளிக்க வழி அமைத்துக்கொடுக்கும் வகையில் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த நடவடிக்கையின் பின்னால், என்.ஆர்.சி. மற்றும் சிஏஏ சட்டங்களை அமல்படுத்தும் நயவஞ்சக திட்டமும் உள்ளடங்கியுள்ளதாக தெரிகிறது. ஆகவே ஒன்றிய அரசின் இந்த முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஏ.கே.கரீம்
மாநில செயலாளர்