அலி (ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா (ரலி) மூலமாக பிறந்தவர் ஹஸன் (ரலி).
ஃபாத்திமா (ரலி) மரணித்த பின்னர் ஹனஃபிய்யா (ரலி) என்ற பெண்ணை அலி (ரலி) மணந்தார். அதன் மூலம் பிறந்தவர் முஹம்மத் (ரலி).
ஒருநள் சகோதரர்கள் இருவருக்குமிடையே ஏதோ பிரச்சினை வர, பேச்சுவார்த்தை தடைபட்டது. இரண்டு நாள் கடந்தது. மூன்றாம் நாள் சிறியவர் முஹம்மத் (ரலி) தம் அண்ணன் ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார் இவ்வாறு:
“அன்புச் சகோதரரே! உங்கள் தந்தையும் என் தந்தையும் ஒருவரே. அதில் நாம் இருவரும் சமம்.
ஆனால் உங்கள் தாய் நபிகளாரின் மகள், சுவனத்துத் தலைவி.
என் அம்மாவோ அவ்வளவாக யாருக்கும் தெரியாத சாதாரணப் பெண். என் அம்மாபோல் ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்தாலும் உங்கள் அம்மாவுக்கு இணையாக மாட்டார்கள். அந்த வகையில் என்னைவிட நீங்கள் சிறப்புக்குரியவர்.
தாங்களோ நபியின் பேரர். நானோ ஒரு சாதாரண முஸ்லிம். அந்த வகையிலும் நீங்களே சிறப்புக்குரியவர்.
தாங்களோ என்னைவிட வயதிலும் வம்சாவழியிலும் அறிவிலும் சிறந்தவர். நானோ இவற்றுள் எந்தச் சிறப்புக்கும் சொந்தக்காரன் அல்லன்.
என்னருமைச் சகோதரரே! இவ்வளவு சிறப்புகள் தங்களுக்கு இருக்க…
நபிகள் (ஸல்) கூறவில்லையா… “இரண்டு முஸ்லிம்கள் பேசாமலிருந்து ஸலாம் கூறி எவர் முதலில் பேச்சைத் தொடங்குகிறாரோ அவரே சிறப்புக்குரியவர்” என்று.
ஆகவே மேலே குறிப்பிட்ட எல்லாச் சிறப்புகளும் தங்களுக்கு இருக்க… இந்தக் கடிதம் கண்டதும் என்னிடம் வந்து ஸலாம் கூறி பேச்சைத் துவங்கி… அந்தச் சிறப்பையும் தாங்களே பெற்றுக்கொள்ளுங்கள். வாருங்கள்!”
கடிதம் கிடைத்ததும் அண்ணன் ஹஸன் (ரலி) ஓடி வந்து ஸலாம் சொல்லி தன் தம்பியைக் கட்டியணைத்து, ” எனக்கே அறிவுரை சொல்லி எனது தவறை உணர்த்திய நீர்தான் என்னைவிடச் சிறப்புக்குரியவர்” என்று அழுகையை அடக்க முடியாமல் கூறினார்.
இஸ்லாம் உறவுகளை ஒட்டி வாழக் கற்றுத்தருகிறது; வெட்டி வாழ்வதற்கல்ல.
சுவனத்துத் திறவுகோல்களில் ஒன்று; இரத்தபந்த உறவுகளைப் பலப்படுத்துவது.
இந்த அவசர உலகில் உறவுகளை நலம் விசாரிக்கும்போதுகூட ‘ஹாய்… ஹலோ…’ என்ற ஒற்றை வார்த்தையுடன் துண்டித்துப் பேசுவதும் கண்ணெதிரே கண்டாலும் காணாததுபோல் துண்டாடிச் செல்வதும் வேதனைக்குரிய விஷயம்.
இறைவன் கூறுகிறான்: “அல்லாஹ்வுக்கு அஞ்சி இரத்தபந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்” (4:1)
நூஹ் மஹ்ழரி
யா அல்லாஹ் எங்கள் உறவுகளை பேணி சேர்த்து வாழும் பாக்கியத்தை தந்தருள்வாயாக 🤲ஆமீன்
தொகுப்பு: அபூதாஹிர்
மயிலாடுதுறை