கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6.11.2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளை 7.11.2021 அன்று முதலமைச்சர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக 8.11.2021 அன்று கனமழையால் பாதிக்கப்பட்ட துறைமுகம், இராயபுரம், ஆர்.கே. நகர், பெரம்பூர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது நாளாக 9.11.2021 அன்று சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம், ரமணா நகர், சுப்பிரமணிய தோட்டம், ஜி.கே.எம். காலனி ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களைக்கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபாலபுரம் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அக்பர் சதுக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  பின்னர், செம்பியம் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, உணவு  தயாரிக்கப்படும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, உணவினைச் சுவைத்து, தரத்தினை ஆய்வு செய்தார். மேலும், கே.சி. கார்டன் 2-வது தெருவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.

தொடர்ந்து, சிவ இளங்கோ சாலை பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, டெம்பிள் ஸ்கூல் சாலை மற்றும் வீனஸ் நகர் 1-ஆவது தெரு ஆகிய இடங்களில்கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்மோட்டார் இயந்திரம் கொண்டு வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், காமராஜர் சாலை, மங்காரம் தோட்டப் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும், டீச்சர்ஸ் கில்டு காலனியில் தொடர்ந்து தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.    அதைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாதன் குப்பம் குளம், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.ஆர்.ஜே. நெடுஞ்சாலை பாயிண்ட் பகுதி ஆகிய இடங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள தணிகாசலம் கால்வாய் மற்றும் ரெட்டேரி வடக்கு பகுதியிலிருந்து கொளத்தூர் ஏரி ஆகியவற்றில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கண்ணகி நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.  மேலும், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கொரட்டூர் ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அக்ரஹாரம் தெருவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குலசேகரபுரம், விருகம்பாக்கம் கால்வாய் வடிகால் பகுதியில் வெள்ளநீர் வரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, கிருஷ்ணா தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். மேலும், சஞ்ஜய் காந்தி நகரில் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர், மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட நெற்குன்றம் – மேட்டுக்குப்பம் பகுதியில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.  மேலும், போரூர்ஏரியில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதியாக, போரூர், பூந்தல்லி – மவுண்ட் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவினைச் சுவைத்து தரத்தினை ஆய்வு செய்தார். மேலும், அங்கு தினசரி சுமார் 400 நபர்கள் உணவருந்த வரும் விவரத்தினை கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மழைக்காலங்களில் மக்களுக்கு தவறாது தொடர்ந்து உணவளித்திட வேண்டும் என்று அம்மா உணவக ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்றஉறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம், கே.எம். கணபதிஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி (வடக்கு) பொறுப்பு அலுவலர் முனைவர் கார்த்திகேயன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜெ. விஜய ராணி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.