குஜராத் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மராட்டியம், டையூ பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மராட்டிய மீனவர் உயிரிழந்ததற்கு ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக ஆற்றிய எதிர்வினை வியப்பளிக்கிறது. மராட்டிய மீனவரது படுகொலைக்கு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கத் துணிகிற பாஜக அரசு, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கப்படும்போதும், படுகொலை செய்யப்படும்போதும் எவ்விதச் சலனமுமின்றி வாய்மூடிக்கிடப்பது கடும் கண்டனத்திற்குரியது. மராட்டிய மீனவரது படுகொலைக்காக பாகிஸ்தான் நாட்டுத்தூதரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக அரசு, தமிழக மீனவரது படுகொலைக்கு சிறுகண்டனமோ, வருத்தமோ, பாதிக்கப்பட்ட மீனவரது குடும்பத்தினருக்கு ஆறுதலோ தெரிவிக்காதிருப்பது தமிழர்கள் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையையே காட்டுகிறது.
இந்தியாவைத் தங்களது சொந்த நாடென்று கருதி, வரிசெலுத்தி, வாக்குச்செலுத்தி வாழ்ந்து வரும் தமிழர்கள் மீன்பிடிக்கச்செல்லும்போது இலங்கைக்கடற்படையினரால் தாக்கி அழிக்கப்படுகையில், இந்நாடு அதனைக் கண்டும் காணாதது போலக் கடந்துசெல்வது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் கொடுஞ்செயலாகும். இதுவரை 850 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். எத்தனை முறை இலங்கைக்கடற்படையினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது? எத்தனை முறை இலங்கை நாட்டுத்தூதரை அழைத்து இந்திய அரசு கண்டித்துள்ளது? எத்தனை முறை தாக்க வரும் கடற்படையைத் தடுத்து தமிழக மீனவர்களை இந்தியக்கடற்படை காப்பாற்றியுள்ளது? மராட்டிய மீனவர் உயிர் மீது காட்டும் அக்கறையில் நூற்றில் ஒருபங்கு தமிழ்நாட்டு மீனவர் உயிர்மீது காட்டியிருந்தால்கூட இத்தனை மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்களே! பாகிஸ்தானென்றவுடன் உடனடியாகப் பாய்ந்து அந்நாடு மீது நடவடிக்கை எடுக்க முனையும் ஒன்றிய அரசு, தமிழர்களை இனவெறிகொண்டு படுகொலை செய்யும் இலங்கை மீது அணுவளவும் கடுமையைக் காட்டாதது ஏன்? 130 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் இமயம் முதல் குமரி வரை ஒவ்வொரு மனித உயிரும் சரிசமமாகக் கருதப்பட வேண்டாமா? இந்திய அரசியலமைப்புச்சட்டம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமமானதில்லையா? மராத்திய மீனவர்கள் மட்டும்தான் மனிதர்களா? தமிழக மீனவர்கள் உயிரற்ற வெறும் பொம்மைகளா? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லையா? தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறினால், அந்நாட்டுடன் மட்டைப்பந்து விளையாட்டைக்கூட விளையாட மறுக்கும் இந்திய நாடு, இரண்டு இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்சியாளர்களை அழைத்து வந்து விருந்து வைப்பது நியாயம்தானா? இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும்; இலங்கை ஆட்சியாளர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமெனக்கோரி, தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அதனைத் துளியும் மதியாது இலங்கையோடு கொஞ்சிக்குலவுவது தமிழர்களைச் சீண்டிப்பார்க்கும் ஆரியத்திமிர் இல்லையா? பத்துகோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டைவிட இரண்டுகோடி சிங்களர்கள் வாழும் இலங்கையின் நட்புறவுதான் இந்தியாவிற்கு முதன்மையானதென்றால், அது ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இந்நாட்டின் மீதும், அதன் ஆட்சியாளர்கள் மீதும் வெறுப்பையும், வன்மத்தையும் ஏற்படுத்தாதா? இதன்மூலம், வருங்கால தமிழ்த்தலைமுறையினருக்கு ‘இந்தியக்குடிமகன்’ எனும் உணர்வே பட்டுப்போய்விடாதா என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு விடையளிப்பார்களா இந்த நாட்டின் ஆட்சியாளர்கள்?
இதனையெல்லாம் சுட்டிக்காட்டி, ஒன்றிய அரசைக் கண்டித்திருக்க வேண்டிய திமுக அரசு, வழக்கம்போல அமைதியையே நிலைப்பாடாக எடுத்து பாஜகவோடு இணங்கிப்போனது வெட்கக்கேடானது. குஜராத் மாநில அரசின் காவல்துறை பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்குத் தொடுக்கிறபோது அதே மாநில அதிகாரத்தைப் பயன்படுத்தி, இலங்கை கடற்படையினர் மீது தமிழக அரசு வழக்குத் தொடுக்க முடியாதா? ஏன் அதனைச் செய்யவில்லை? கேரளாவில் இரு மீனவர்கள் இத்தாலிக்கடற்படையினரால் கொல்லப்பட்டபோது அம்மாநில அரசு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அப்படுகொலை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றம்வரை கொண்டு சென்றது. இங்கு கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறுஉடற்கூராய்வு செய்யகூட மாநில அரசு மறுத்ததோடு, அவரது உடலை உறவினர்களுக்குக் காட்ட மறுத்து பெருங்கொடுமையை அரங்கேற்றியது. தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் சிங்கள அரசோடு உறவுகொண்டாடும் பாஜக அரசையும், அதனைக் கண்டிக்காது, அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. மீண்டும் மீண்டும் இந்நிலையே தொடருமானால், ‘தமிழ்நாடு எங்கள் தாய்நாடு; இந்தியா எங்கள் அண்டை நாடு’ எனக்கருதுகிற மனநிலைக்கு அது தமிழர்களை தள்ளிவிடும் என எச்சரிக்கிறேன்.
ஆகவே, தமிழக மீனவர் ராஜ்கிரண் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், மீனவர் ராஜ்கிரண் உடலைத் தோண்டியெடுத்து மறு உடல்கூராய்வு செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.