ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 13.11.2021 அன்று பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் உள்ள 21,000 குடும்பங்களுக்கு ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி, நடமாடும் மருத்துவ முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவிக்கையில் , கடந்த ஒரு வாரகாலமாக பெய்த கனமழையின் காரணமாக, குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதியில் இருக்கின்ற தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உள்ள 21,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இது குறித்து நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இன்றைக்கு 21,000 குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இன்றைக்கு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 53 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தொற்று நோய் வரக்கூடிய மலேரியா, டெங்கு, சளி மற்றும் இருமல் போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாத்திட நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இன்றைய தினம் 174 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக 486 இடங்களில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாம்களில் 7,654 மக்கள் பயன் அடைந்துள்ளனர். இது போன்ற முகாம்கள் நமது மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த குடியிருப்புகளில் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்புக்குள்ளாகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் வடிகால்கள் அமைக்க வேண்டும் என்று நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றது.
சென்னை மாநகராட்சியின் மூலமாகவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாகவும், தொண்டு நிறுவனங்களின் மூலமாகவும், இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு வாரகாலமாக மூன்று உணவு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிகின்ற வரையில் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மூன்று உணவு வழங்கப்படும். இந்த பொறுத்த வரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க எந்த மக்களும் பாதிக்கப்பட என்பதற்காக போர் கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த் ராவ் இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சிவகிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப., சென்னை மாநகராட்சி தெற்கு துணை ஆணையர் சிம்ரான்ஜீத் சிங் கஹலோன் இ.ஆ.ப., மற்றும் பொறியாளர் இராம. சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.