சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

உரையைத் தொடங்கும் முன்பு ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும்.நம்முடைய இந்தியா சிமெண்ட்ஸ் திரு.சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திட வேண்டும்,  முதலமைச்சராக வந்திட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அவரைப்  பொறுத்தவரையில் நான் முதலமைச்சராக வந்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் தோனியினுடைய ரசிகராக நான் வந்திருக்கிறேன். நான் மட்டும் வரவில்லை, என் பேரன், பேத்திகள் எல்லாம் வந்திருக்கிறார்கள். எல்லோரும் அவருடைய ரசிகர்கள். என் அப்பா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் தோனியினுடைய ரசிகர்தான். அதனால் மகிழ்ச்சியாக வந்திருக்கிறேன், பெருமையோடு வந்திருக்கிறேன், பூரிப்போடு வந்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் முதலில் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவத்தின் நிர்வாக இயக்குநர் மதிப்பிற்குரிய திரு.என்.சீனிவாசன் அவர்களே!சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என் மனம் கவர்ந்த  மகேந்திர சிங் தோனி அவர்களே!இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு. ஜெய் ஷா அவர்களே! ஐபிஎல் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான திரு. பிரிஜேஷ் பட்டேல் அவர்களே! இந்திய அணிக்காக விளையாடிய தலைசிறந்த ஆல்ரவுண்டர் திரு. கபில்தேவ் அவர்களே! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திருமதி. ரூபா குருநாத் அவர்களே! இந்த விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே! சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே! கிரிக்கெட் விளையாட்டு வீரர்களே! அன்பிற்குரிய ரசிகர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியினரை வாழ்த்திப் பாராட்டுகிற விழாவில் பங்கேற்கக்கூடிய  வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய திரு.சீனிவாசன் அவர்களுக்கு உளமாற என்னுடைய நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சென்னை என்றாலே சூப்பர்தான். மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்தப் பாராட்டு விழா நடந்துகொண்டிருக்கிறது. நான் இங்கே இருந்தாலும், இந்த நிகழ்ச்சியிலே, இந்த விழாவிலே கலந்துகொண்டிருந்தாலும், முதலமைச்சர் என்கிற முறையில் கலந்துகொண்டிருக்கக்கூடிய என்னுடைய மனதுஇப்போது கடந்த பத்து நாட்களாகப் பெய்துகொண்டிருக்கக்கூடிய மழையைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குரிய பாதுகாப்பை, நிவாரணப் பணிகளை எப்படி நடத்தவேண்டும் என்பதைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நேரத்தில் சிறிதுநேரம் கொஞ்சம்இளைப்பாறலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த விழாவில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். கோட்டையில் இருந்தாலும் குடிசைகளைப் பற்றியே நினைத்தபடி இருக்க வேண்டும் என்று எங்களையெல்லாம் ஆளாக்கிய எங்களுடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அத்தகைய எண்ணத்தோடுதான் இந்த மேடையில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன்தான். சென்னையில் மேயராக இருந்தபோது காட்சிப் போட்டிகளில் நான் விளையாடி இருக்கிறேன். போட்டிகளையும் நடத்தியும் இருக்கிறேன்.

இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பை வென்ற போது அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்தியவர் கம்பீரமான வீரரராக இங்கே வீற்றிருக்கிறாரே கபில்தேவ் அவர்கள். நான் சென்னை மேயராக இருந்த போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற, கார்கில் போர் நிதிக்கான காட்சிப் போட்டியிலும் அவருடன் சேர்ந்து மேயர் என்ற முறையிலே விளையாடக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கபில்தேவ் அவர்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர்தான் நம்முடைய தோனி அவர்கள். இந்த மேடையில் கேப்டன் தோனி இருக்கிறார், அவரைப் பாராட்டுவதற்காக வந்திருக்கிறேன். தோனி அவர்களுடைய சொந்த மாநிலம் ஜார்கண்ட். ஆனால், இப்போது அவர் ஏறத்தாழ சென்னைக்காரர் போலவே ஆகிவிட்டார். தமிழ்நாட்டு ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இப்போது அவர் இருக்கிறார். Dear Dhoni, You may be from the state of Jharkhand. But we, the people of Tamilnadu love you as one among us. தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால், தோனி அவர்கள் மஞ்சள் தமிழர். தமிழர்களுக்கு எல்லாம் அவரைப் பிடிக்கும் போது, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு அவரைப் பிடிக்காமல் இருக்குமா!?

எத்தனை பரபரப்பு இருந்தாலும், எத்தனை நெருக்கடி இருந்தாலும், தலைவர் அவர்களும், தோனி அவர்களும் Cool- ஆக இருப்பார்கள். நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டு எழுந்து வெற்றி பெறுவது என்பதை அறிந்தவர்கள்; நிரூபித்தவர்கள்! ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையைப் பெற்றது என்பதை விட, ஐபிஎல் போட்டிகளில் தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டது என்பதே சரியானதாகும். கேப்டன் தோனி அவர்கள் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் எழுந்திருக்கிறது. அதுதான் மிகமிக முக்கியமானது. தோனி அவர்கள் முதன்முதலாக களத்தில் குதித்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். நீளமான முடி – உருண்டு திரண்ட தோள்களோடு அவர் களத்தில் நின்ற போது அனைத்து ரசிகர்களும் அவர்மேல் அன்பு கொண்டார்கள், ஈர்ப்புக் கொண்டார்கள். அவர் விளாசிய சதங்கள், அதிரடியாக அவற்றை எட்டிய வேகம், ஸ்டைலாக அடித்த ஹெலிகாப்டர் ஷாட் மறக்கவே முடியாது யாராலும். அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடியவர். டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவில் கிரிக்கெட் என்றால் அது தோனிதான் எனும் நிலை உருவாகியிருக்கிறதுநான் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு நாளும் சில திட்டங்களைப் அறிவித்தபோது, பல கிரிக்கெட் ரசிகர்கள், இளைஞர்கள் என்ன சொல்லி வாழ்த்தினார்கள் என்றால், தினமும் ஒரு சிக்சர் அடிக்கிறேனாம். அப்போது எல்லாம் தோனியை நினைத்துக்கொள்வது உண்டு. இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சிறிய நகரில் இருந்து, கடின உழைப்பால் உச்சத்தைத் தொட்டவர் என்பதால்தான் தமிழக மக்கள் தோனி அவர்களைத் தங்களில் ஒருவராகக் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து, அசாதாரண உயரங்களைத் தொட்டவர் என்பதால்தான், தலைவர் கலைஞர் அவர்களும் தோனி மேல் தனி அன்பு கொண்டிருந்தார்.

தலைசிறந்த பினிஷர், விக்கெட் கீப்பர், விளையாட்டு வீரர் என்று சொல்வதை விடச் சிறந்த கேப்டன்ஷிப்புக்கான அடையாளம் அவர் என்று சொல்வதே சரியானது என்று நான் நினைக்கிறேன். திறமையாக விளையாடலாம். தனித்து வெற்றி பெறலாம். ஆனால், ஒரு அணியை வழிநடத்துவது என்பது மிகமிகப் பெரிய சவாலானது ஆகும். ஒரு அணியை உருவாக்குபவர்தான் தலைசிறந்த ஆளுமையாகப் போற்றப்படுவார்கள்டூபிளசி, பிராவோ போன்ற அனுபவம் மிக்க வீரர்களையும், ருதுராஜ் போன்ற இளம் திறமைகளையும் ஒரே புள்ளியில் இணைத்து தோனி ஈட்டியிருக்கும் வெற்றிதான் ஒரு தேர்ந்த ஆளுமைக்கான எடுத்துக்காட்டு. அத்தகைய ஆளுமைத் திறன் கொண்டவராக தோனி அவர்கள் இருப்பதால்தான், இன்று அனைவராலும் அவர்பாராட்டப்படுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனைவரைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம், நேரமாகும். எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்புதான் மிகமிக முக்கியம். இலக்கும், உழைப்பும் ஒன்று சேர்ந்தால் அவர்களை யாராலும் வீழ்த்த முடியாது. இது விளையாட்டுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் பொருந்தும். சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சீனிவாசன் அவர்கள், சிமெண்ட்டைப் பற்றி நன்கு அறிந்தவர். அதனால், தனது அணியை உறுதியுடன் மீட்டெடுத்திருக்கிறார். இது தொடர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நல்ல விளையாட்டு வீரர், தன்னுடைய விளையாட்டை மட்டுமல்ல, எல்லா விளையாட்டுகளையும் ரசிப்பார்கள்,பாராட்டுவார்கள்அதேபோல, ஒரு நல்ல அரசு, எல்லாத் துறைகளையும் சார்ந்த மக்களையும் பாதுகாக்கும். எல்லா விளையாட்டுகளுக்கும் ஊக்கமளிக்கும். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதுடன், சர்வதேசப் போட்டிகளில் அவர்கள் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான பயிற்சிகள் அளிப்பதற்கேற்ற களங்களை உருவாக்கித் தருவதிலும் நமது அரசு முனைப்பாகச் செயலாற்றுகிறது.

அதனடிப்படையில், சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்தவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பணிகளைவழங்கி உள்ளோம். தனித்தனித் திறமை கொண்ட வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் போதுதான், ஒரு அணி தனது முந்தைய தோல்விகளில் இருந்து மீண்டு எழும், முழுமையான வெற்றி கிடைக்கும். அந்த நம்பிக்கையுடன், தனது அபார வெற்றியின் மூலம் மீண்டெழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்களையும், அவருடன் இணைந்து வெற்றிக்குத் துணை நின்ற வீரர்களையும், அணியின் உரிமையாளர், பயிற்சியாளர், மருத்துவர் உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்தி நான் வணங்குகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்நீங்கள் உங்கள் விளையாட்டைத் தொடருங்கள். நாங்கள் எங்கள் மக்கள் பணியைத் தொடர்கிறோம்.