மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மாநில உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020-இன் சாரமானது, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும். மின்சார வழங்கலை தனியார் மயமாக்கும்.  நுகர்வோரின் தலையில் மிகைக் கட்டணத்தைச் சுமத்தும்.  வேளாண்மைக்கு வழங்கும் கட்டணமில்லா மின் சாரத்தைப் பறிக்கும். வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொடுப்பதையும், அதற்குக் கட்டணம் முடிவு செய்வதையும் தனியாரிடம் ஒப்படைக்க இந்த மின்சாரத் திருத்தச் சட்டம் வழி வகுக்கிறது.  இந்தச் சட்டத்திருத்தத்தின் படி, வீட்டு முனை வரைக் கம்பியை இழுத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பணி, அதை வீட்டில் உள்ள மின் கம்பியோடு இணைத்துக் கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது மட்டும் தனியார் நிறுவனத்தின் பணி. இதை விட நகைப்புக்குரியது வேறு ஏதாவது இருக்க முடியுமா? அதாவது, காடு, மலை எல்லாம் திரிந்து கம்பம் நட்டு, கம்பியை போட்டு, மின்மாற்றி அமைத்து, சந்து பொந்தெல்லாம் இணைப்பை ஏற்படுத்திய அரசுக்கு, வீட்டில் உள்ள மின் கம்பியோடு இணைத்துக் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க முடியாதா?.  பகிர்மானத்திற்கு உரிமம் பெறுவோர், அதற்கு கீழ்த் துணை உரிமம் பெறுவோர், இந்த வழங்கலை ஒருங்கிணைக்கும் குத்தகைதாரர் அனைவரையும் முடிவு செய்யும் அதிகாரம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார ஆணையத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு உரிமம் பெறுவோர் மாநில அரசிடம் இசைவுப் பெற அவசியம் இல்லை, மாநில அரசுக்குத் தகவல் தெரிவித்தால் போதும் என்கிறது இந்த சட்டத்திருத்தம்.  இதன் காரணமாக தான், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். எனவே, மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படும் வகையிலும் உள்ள மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.