பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக இந்திய சினிமாவின் பிரபல திரைக்கதை மேதையும், முன்னணி இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் பி ரங்கநாதன் தெரிவித்தார். ‘பாகுபலி 1 மற்றும் 2’, ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘மணிகர்னிகா’ மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஆர் ஆர் ஆர்’ உட்பட தெலுங்கு, தமிழ், இந்தி என 25க்கும் மேற்பட்ட இந்திய அளவிலான பிரமாண்ட வெற்றி படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் ரங்கநாதன் கூறினார். ஸ்ரீவாரி பிலிம் ஏற்கனவே ‘தர்மபிரபு’ மற்றும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. ‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப சித்திரமாகும். இதில் சேரன் மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விநியோகஸ்தராக திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கநாதன் தனது கடின உழைப்பின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர் ஆவார். தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல படங்களை அவர் விநியோகம் செய்து சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.