மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம் வாயிலாக தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது. இவரது நிறுவனத்தை அணுகி, ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி அவர்களை நம்பவைத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி, அவற்றை தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து அப்போதைக்கு சமாளித்துள்ளார் முரளி ராமசாமி. அதன்பின்னர் ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்பதும் தங்களை மோசடியாக ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து முரளி ராமசாமியிடம் கேட்டபோது, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்ததுடன், அலட்சியமாகவும் பதிலளித்துள்ளார். ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் என்னை மீறி உங்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை மூலம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது தமிழ் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.