தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4-ம் தேதி(இன்று) தான் கடைசி நாள் என்பதால் வேக வேகமாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க., மாவட்ட தொழிற்சங்கச் செயலாளர் ஈ.ஆர்.டி. மூர்த்தி நேற்று வேட்புமனுத் தாக்கல் அப்போது அவருடைய மகள் மெய்ரித்திகாவிற்கு வேலுநாச்சியர் போல வேடம் அணிவித்து உடன் அழைத்து வந்திருந்தார். தேர்தல் விதிமுறைகளையொட்டி குழந்தை மெய்ரித்திகாவை வேட்புமனுத் தாக்கல் செய்ய அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. `தே.மு.தி.மு.க., கட்சியைச் சேர்ந்தவங்க சட்டத்தை மதிக்கிறவங்க. அதனால நான் வாக்குவாதம் எல்லாம் செய்ய மாட்டேன் சார்’ என மகளை வெளியே நிறுத்திவிட்டு மூர்த்தி வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டு வந்தார். ‘வேட்புமனுத் தாக்கலுக்கு வேலுநாச்சியார் வேடமணிந்து மகளை அழைத்து வந்தது ஏன்!’ என மூர்த்தியிடம் பேசினோம். “வெள்ளையனே வெளியேறுன்னு சொல்லி வெள்ளைக்காரர்களை எதிர்த்து வேலுநாச்சியார் போராடுனாங்க. அப்படி ஒரு வேலுநாச்சியாரைப் போல குழந்தைகளை வீரத்துடன் எல்லாரும் வளர்க்கணும் என்கின்ற உதாரணத்திற்காகத் தான் என் மகளுக்கு வேலுநாச்சியார் வேஷம் போட்டு கூட்டிட்டு வந்தேன். என் மகளை நான் வீரத்தோட தான் வளர்த்துருக்கேன். எனக்கு அப்துல் கலாம் ஐயாவை ரொம்ப பிடிக்கும். அவர் கண்ட வளமான, வலிமையான வல்லரசு இந்தியா என்கின்ற கனவு நனவாக பெண்கள் முன்னேற்றமும், அவர்களுக்கான வலிமையும் ரொம்ப அவசியம். எனக்கு ஆன்மீகம் பாதி, அரசியல் பாதிங்க. வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செஞ்சிட்டு தான் வேட்புமனுத் தாக்கல் செய்யவே வந்தேன். கடவுளையும் மக்களையும் நம்பி களத்துல இறங்குறேன். எல்லாரும் நாளைக்கு உங்களுக்கு இது செஞ்சுக் கொடுக்குறேன், அது செஞ்சுக் கொடுக்குறேன்னு சொல்லி ஓட்டு கேப்பாங்க. என் பகுதி மக்களோட அடிப்படை விஷயங்களுக்கு நான் கடந்த காலங்கள்ல நிறைய உதவி செஞ்சுக் கொடுத்துருக்கேன். அதை தொடர்ச்சியாக செய்ய அவங்க எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைப்பாங்க, என்னைக் கைவிட மாட்டாங்கன்னு நம்புறேன்” என்றார்.