சென்னை மாநகரில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அதிக அளவில் ஆட்டோக் களை பயன்படுத்துகிறார்கள். ரும்பாலானஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, ஆபத்தான முறையில் பள்ளிகளுக்கு செல்வது காணப் படுகிறது. இவ்வாறு செய்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக அதிக எண்ணிக்கையிலான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் ஆட்டோக்கள் மீது, 05.11.2019) அன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளால் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையில், போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 1,275 ஆட்டோரிக்ஷாக்கள் மீது, மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனி வரும் காலங்களில் இது போன்று அதிகளவிலான குழந்தைகளை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது. இதுபோன்ற ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கினர். தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக அதிக அளவிலான பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வது அறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்யவும், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.