டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் டாணாக்காரன் அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும். அதே போல, நடிகர் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு மைல்கல்லாக இருக்கும். திரைப்படத்தின் ஒவ்வொரு நடிகர், நடிகையும் தங்களது கதாபாத்திரங்களுக்காக முழு அர்ப்பணிப்போடு கடின உழைப்பைத் தந்துள்ளனர்.
படத்தின் பதாகையும் முன்னோட்டக் காட்சியும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் ட்ரெய்லரும், இசையும் விரைவில் வெளியாகவுள்ளது. மாயா, மான்ஸ்டர், மாநகரம் உள்ளிட்ட தனிச்சிறப்பு கொண்ட படைப்புகளை வழங்கிய பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த வருடம் வெளியிடும் முதல் திரைப்படம் இது. எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர் முன்னதாக ஜெய் பீம் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான பாராட்டுகளைப் பெற்றிருந்த தமிழ், டாணாக்காரன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கும் தமிழ், இதற்கு முன் தமிழக காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்றும் நினைவில் நிற்கும் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அஞ்சலி நாயர் நாயகியாகவும், லால், எம் எஸ் பாஸ்கர், லிவிங்க்ஸ்டன் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 2022ல் டாணாக்காரன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.