ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார். கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய – “நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே என்னில் ஏதோ ஆனது நீதானே..
காதலே நீதானே.. பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா..“ – என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி. வி. பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் பாடியிருக்கிறார்கள்.
மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டது. பேட்டரி மே மாதம் திரைக்கு வருகிறது.