தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதிநிலை அறிக்கையாகும். அரசு சாரா தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி, புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அகரமுதலி’ திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடத்தவும், விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கவும், தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு நடத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மூலம், தமிழ் உலக மொழிகளின் முன்னோடி என்பதை மீண்டும் பறைசாற்றுவதற்கான வாய்ப்பாகும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, தமிழ்மொழிக்கும், பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கதக்கது. இதன் வாயிலாக, தமிழ் மொழியின் தொன்மை, செம்மையை நிலை நாட்ட முடியும். தமிழர்களின் மரபை கொண்டாடக் கூடிய வகையில்ஆண்டுத்தோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்துவது என்ற அறிவிப்பு வரவேற்கதக்க முடிவாகும். கடந்த காலங்களில் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களையும், நஷ்டத்தையும் எதிர்க்கொண்டு வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் வகையில் பயிர்கடன் வழங்க ரூ.4,130 கோடி நிதியும், வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது. ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற பாசிச சக்திகளின் சாதி, மதங்கள் மீதான அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் தலைதூக்கி வரும் நிலையில், தந்தை பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானதாகும். அதோடு, சமூகநீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை என்ற கொள்கை பிடிப்பில், அயோத்தியதாசர், ஐயா வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் இருந்துள்ளனர். அவர்களின் கொள்கையை, பேச்சுக்களை தொகுத்து, அச்சு, டிஜிட்டல் வழியில் வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
சில ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், சில முதலாளிகளால், நீர்நிலைகளும், அரசு நிலங்களும் ஆக்கிமிரப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், நீர்நிலை மற்றும் அரசு நிலங்களை மீட்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மழை காலங்களில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்க்கொண்டன.
இந்த நிலையில், வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ.500 கோடி போதுமானதாக இருக்காது. ஆனாலும், வெள்ளப் பாதிப்பை உணர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நம்பிக்கை, தமிழ்நாடு அரசு மீது உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழ்நாடு சந்திக்கும் என்றும் ஜி.எஸ்.டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நிதியமைச்சர், ஜி.எஸ்.டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முழு கவனம் செலுத்துவதோடு, ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு ரூ.1,520 கோடி ஒதுக்கீடு, சமத்துவபுரங்களை பராமரிக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு, பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.5, 375 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் உள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.1,064 கோடி ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.849 கோடி நிதி ஒதுக்கீடு, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு, டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு, காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு, வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கதக்கது. அதுமட்டுமின்றி, பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு, உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு, தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாடு திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு ஆகியவை, மாணவ – மாணவிகள் பயன்பெறும் முக்கிய திட்டங்களாகும். சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது. தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு பெரும் பயனாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, இந்த சிறப்பான நிதிநிலை அறிக்கை சமர்பித்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.