புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ், நேஹா ஜோடியாக நடிக்கும் படம் ‘காதல் செய்’ . கணேசன் டைரக்டு செய்துள்ளார். இப்படத்துக்கு இசைஞானி இளையாராஜா இசை அமைத்திருக்கிறர். காதல் செய் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னை கோடம்பக்கத்தில் உள்ள இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோ வில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இளையராஜா பட முன்னோட்டத்தை வெளியிட்டார். பின்னர். அவர் பேசியதாவது:
“எதிர்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி.வாசுக்களே… எதிர்கால இளைய ராஜாக்களே…” “ஏன்யா, காலகாலத் துக்கும் பாரதிராஜாக்கள், இளைய ராஜாக்கள் வருவாங்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான். ஏன்யா, சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் உலகத்துல வரல? ஒண்ணுதான் வரும். அது என்ன தென்னமரமா, ஆயிரம் வைக்கறதுக்கு… ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரம் பொறக்கறதுக்கு… பொறந்து வளரணும்யா… ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ங்கற குறள் மாதிரிதான். செல்வம் படைச்சவனா இருக்கறது வேறு. ஆனா, ரொம்ப தெளிந்த அறிவோடு இருப்பது வேறு. திருவேறுனா இன்னொரு அர்த்தமும் இருக்கு. நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்டா… ஆனா, தெள்ளியராக இருப்பது ரொம்ப கஷ்டம்.
இந்தப் படத்தை எடுக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஒரு படத்தை எடுக்க எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம். படத்தைப் பார்க்கற வங்களுக்குத்தான் கஷ்டம் வரக்கூடாது. ‘காதல் செய்’னு டைட்டில் வச்சிட்டீங்க. காதல் செய்ய பார்க்கறேன். என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனா, எதைக் காதலிக் கணும் என்பதுல நான் ரொம்ப தெள்ளி யனா இருக்கேன்.” என்று பேசினார்.
பாரதிராஜா பேசும்போது, “காதல்தான் மனதை வளப்படுத்துகிறது. பெரிய கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாகக் காதல் இருந்திருக்கும். இளையராஜாவுக்கும் இருந்திருக்கும். அது இல்லாவிட்டால் உலகம் இயங்காது. இந்தியாவில், தமிழகத்தின் பெரிய சொத்துகளில் ஒன்று இளையராஜா” என்றார். அனைவரையும் பி ஆர் ஓ டைமண்ட் பாபு வரவேற்றார்.