பழங்குடியினர் நலனுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தகவல்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா கூறியதாவது: பழங்குடியினர் நலனுக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.37,802.94 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.51,283.53 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.52,024.23 கோடியும் ஒதுக்கப்பட்டது. நாட்டில் உள்ள பழங்குடியினரின் நலன் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக பல திட்டங்களை பழங்குடியினர் அமைச்சகம் அமல்படுத்துகிறது. பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்துடன், 40 மத்திய அமைச்சகங்கள், துறைகள் தங்களின் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 4.3 முதல் 17.5 சதவீதத்தை பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ஒதுக்குகின்றன.  இந்த திட்டங்களின் கீழ் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்ப்பாசனம், சாலைகள், வீடுகள், குடிநீர், மின் வசதி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டு நாட்டில் உள்ள பழங்குடியினர் சமூக பொருளாதாரம்  மேம்படுத்தப்படுகிறது. பழங்குடியினர் நலனுக்கு திட்டம் வாரியான நிதி ஒதுக்கீடுகள் மத்திய பட்ஜெட்டில் செலவின அறிக்கை 10 பி பிரிவில் உள்ளது. இது நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.