உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களுக்கு வரவேற்பு – இரா.முத்தரசன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலும், அலட்சியப்படுத்தலும் தொடர்ந்து வரும் நிலையில், அவரது அத்துமீறலுக்கு உச்சநீதி மன்றம் உரத்த குரலில் அறிவுரை வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலைப் பிரச்சினையில் தமிழ்நாடு ஆளுநர். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இருமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியும், தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பர் 9 ஆம் தேதி எழு பேர்களையும்  விடுதலை செய்வது என முடிவு எடுத்து, நிர்வாக அதிகாரப்படி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. புதிய அரசு அமைந்ததும் முதலமைச்சர், பிரதமரை சந்தித்து எழுவர் விடுதலை, நீட் விதிவிலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் தமிழக அரசின் முடிவுகள் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் உணர்வுகளை நிராகரித்து செயல்படுவதை தமிழக ஆளுநர் மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை குறித்து, உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் வழக்கில் “அமைச்சரவையின் முடிவுகளை ஏற்று செயல்படுவது ஆளுநரின் கடமைப் பொறுப்பாகும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் மாநில அரசு நிர்வாக ரீதியான ஒப்புதல் வழங்கும் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள ஆளுநர், மாநில அரசு அனுப்பும் எல்லா மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விடுவது, தனது பொறுப்பை நிறைவேற்றாமல் தப்பித்துக் கொள்ளும் செயலாகும். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு வலுச்சேர்க்காது என உரத்த குரலில் அறிவுரை கூறி, பேரறிவாளன் விடுதலை குறித்து நிலவிவரும் குழப்பங்களுக்கு உச்ச நீதிமன்றமே அவரை விடுதலை செய்வது தான் தீர்வாக அமையும்” என கருத்துத் தெரிவித்துள்ளது. அதிகார அத்துமீறலில் எல்லை தாண்டி செயல்படும் ஆளுநர்களுக்கு அறிவுரையாக அமைந்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.