மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தர்மபுரம் ஆதினத்தின் பட்டனப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது. கால மாற்றத்தில் சமூக நாகரீக வளர்ச்சியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை ஆதினம் கருத்தில் கொண்டு மனிதனை மனிதன் சுமக்கும் வழக்கத்தை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நிர்வாகம் மனிதர்கள் மனிதனை தூக்கிச் செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை தர்மபுர ஆதினம் மதித்து நடக்க வேண்டும். ஆன்மிக நம்பிக்கை கொண்டோர் நடத்தும் ஒரு நிகழ்வை தமிழ்நாடு பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலையும் அரசியல் ஆதாயம் தேடி பயன்படுத்தும் மலிவான செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பண்டங்கள் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வரும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முனைப்பில் அஇஅதிமுக-பாஜக கூட்டாளிகள் செயல்படுவதை மக்கள் நன்கறிவார்கள். நாகரீக வளர்ச்சியை ஏற்கும் முறையில் மனிதர்கள் பல்லக்குத் தூக்கும் பழைமைவாத செயலை விட்டொழிக்க அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.