உங்கள் அன்போடு, ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் நம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் எந்த நம்பிக்கையோடு, எந்த உணர்வோடு ஆதரித்தீர்களோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 வருடம் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் ஒரே வருடத்தில் கலைஞர் அவர்கள் உருவாக்கிய நம்முடைய ஆட்சியில் செய்து முடித்திருக்கிறோம். நீங்கள் நம்பி வாக்களித்த திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு இந்த ஆட்சி பிடித்திருக்கிறதா, இல்லையா என்று சொல்லுங்கள். நான் தேர்தல் நேரத்தில் உங்களிடத்தில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றக்கூடிய அரசாக இந்த ஆட்சி அமைந்திருக்கிறது. குறிப்பாக மகளிருக்காக அற்புதமான திட்டங்கள் எல்லாம் நாங்கள் இந்த ஆட்சியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். வீடு தேடி வரக்கூடிய இல்லம் தேடிக் கல்வித் திட்டம், உங்களையெல்லாம் நாடி வரக்கூடிய மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இப்படி பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நான் வந்திருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் உங்களை சந்திப்போம், ஆட்சியில் இல்லாவிட்டாலும் உங்களை சந்திப்போம். அது தான் திமுக ஆட்சி.
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியில் சொன்ன உறுதி மொழிகளில் பெறும்பாலனவற்றை கடந்த ஒரே வருடத்தில் செய்து முடித்திருக்கக்கூடிய ஆட்சிதான் நமது ஆட்சி, உங்கள் ஆட்சி. ஒரு பெரிய கொடூரமான கொரோனா என்ற தொற்றுநோய் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்தது. தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வந்த போது நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறோம். நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நேரத்தில், கொரோனா என்ற அந்த கொடிய தொற்று நோய் எப்படியெல்லாம் மக்களை வாட்டி வதைத்தது என்று உங்களுக்கு தெரியும். எத்தனை பேருடைய உயிரை இழந்து இருக்கிறோம், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டார்கள், எவ்வளவு குடும்பங்கள் சீரழிந்தது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று முடிவுசெய்து சபதம் எடுத்துக் கொண்டு, என்னுடைய உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் கொரோனா நோயினால் அனுமதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு நேரடியாக சென்று, நோயாளிகளை பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தவன் தான் நான். கொரோனா நோய் தொற்று பரவலை எப்படி தடுத்து நிறுத்தி இருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைத் தொடர்ந்து பெரும் மழை, வெள்ளம் வந்துவிட்டது. அதை எப்படி சமாளித்தோம் என்பதும் தெரியும். இதையெல்லாம் சமாளித்து இந்த ஒரு வருடத்தில், பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தால் என்னென்ன செய்திருக்க முடியுமோ, அதை விட அதிகமான அளவிற்கு இந்த ஒரு வருடத்தில் பல திட்டங்களை, சாதனைகளை செய்து காட்டியிருக்கிறோம். அதனால்தான், அதை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், நகராட்சித் தேர்தல், பேரூராட்சித் தேர்தல், கிராம பஞ்சாயத்து தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் தேடித் தந்திருக்கிறீர்கள். எனவே அதற்கும் நன்றி சொல்ல நான் விரும்புகிறேன், கடமைப்பட்டிருக்கிறேன்.
எனக்கு தந்திருக்கக்கூடிய இந்த சிறப்பான வரவேற்பிற்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளித்த இந்த அன்பான, உற்சாக வரவேற்பு என்னை மேலும் பணி செய்வதற்கு ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்து முதலமைச்சராக நீலகிரி மாவட்டத்திற்கு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். ஆட்சியில் இல்லாத போது நீங்கள் அளித்த வரவேற்பும், தற்போது நீங்கள் அளித்திருக்கக்கூடிய இந்த வரவேற்பும் இன்னும் என்னை ஊக்கப்படுத்துகிறது, உற்சாகப்படுத்துகிறது. என்றைக்கும் உங்கள் அன்பிற்காகக் நான் கட்டுப்பட்டவன். என்றைக்கும் உங்களுடைய பாசத்திற்காக நான் கட்டுப்பட்டவன். அந்த உணர்வோடு, உங்கள் அத்தனை பேருக்கும் நான் மீண்டும் ஒரு முறை நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.