படைப்பிலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறை ஆகியவற்றில் கால்பதித்து. தனது பயணத்தில் 50 ஆண்டுகளைக் கடந்து, இவ்வாண்டு பொன்விழாக் காணும் அன்னார் பற்றிய எனது பார்வை)
” தோன்றில் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ” என்றார் வள்ளுவர். புகழ் நம்மைத் தேடி வரவேண்டுமே தவிர நாம் புகழைத்தேடி அலையக்கூடாது.இன்று எம்மவர்கள் மத்தியில் புகழோடு வாழ்பவர்களில் ஒருவராக நண்பர் லோகேந்திரலிங்கம் திகழ்கிறார். இந்தப் புகழுக்கு அப்படி இவர் என்ன செய்தார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு . அவரது அயராத அசராத கடின உழைப்பே காரணம். வள்ளுவப் பெருந்தகை அழகாக சொல்லுவார் ” தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும் ” இவரது கடின உழைப்பு என்பது ஒருநாள் ஒருமாதம் ஒரு வருடம் என்பதல்ல. கனேடிய மண்ணிலே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துவருகின்றார். முதல் மூன்று வருடங்கள் சூரியன் பத்திரிகையில் ஆரம்பித்த பயணம் பின்னர் உதயனில் தொடக்கி இன்றுவரை அவரது எழுத்துப்பணி தொடர்கிறது. இவரது உழைப்பு எப்படிப்பட்டது மெய்வருத்தம்
பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார் . என்ற பாடலுக்கு ஒப்ப தன்னை வருத்தி ஊன் உறக்கமின்றி இந்தத் துறையில் உழைத்து வருகின்றார். இவர் ஒரு பிறவிக் கவிஞர்.எழுத்து இவரது மூச்சு. எனவேதான் எழுத்தையே மூலதனமாகக் கொண்டு ” எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு ” என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப மிகத் துணிச்சலோடு பணியாற்றி வருகின்றார்.
அதனால்த்தான் இவரைப்பற்றி எழுத முற்பட்ட போதே “வள்ளுவமாய் வாழும் நட்பின் நாயகன் ” என்ற தலைப்பில் எழுத முற்பட்டேன்.”முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ” என்பதால்தான் இந்த எழுத்துப்பணியில் நிலைத்து நிற்கமுடிகிறது நிமிர்ந்து நிற்கமுடிகிறது. பொன்விழா காணவும் முடிகிறது. இவருக்கு கிடைக்கின்ற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இவரது உண்மையான உழைப்பிற்குக் கிடைத்த பரிசில்கள்.
ஒரு சிலருக்கு பாராட்டுக்கள் ” விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்கள் நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்வேம்பெனும் நன்று ” என்று வாயாரப் புகழுவார்கள்.
ஆனால் திரு.லோகேந்திரலிங்கம் அவர்களுக்கான புகழ் வரவேற்பு என்பது அவரது கிடைக்கின்ற அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
வள்ளுவப் பெருந்தகையின் குறளோடு இவர் வாழ்க்கை எவ்வாறு ஒத்துப்போகிறது என்று பாருங்கள்.
மனைவி என்னும் மாதரசி
நண்பர் லோகேந்திரலிங்கத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் காலாகவும் காரணமாகவும் இருப்பவர் அவரது அருமைத்துனைவியார் சகோதரி பத்மா லோகேந்திரலிங்கம் என்றால் மிகையாகாது . வள்ளுவன் அழகாகச் சொல்லுவார் ” மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில் “இதன் பொருள் ஒருவர் எவ்வளவுதான் பேரும் புகழும் பெற்றிருந்தாலும் அவரது மனைவியிடம் இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற் பண்புகள் இல்லையென்றால் எவ்வளவு சிறப்புக்கள் இருந்தாலும் பயனில்லை .
இதையே மூதுரையில் ஒவ்வையார் மிக அழகாகச் சொல்லுகின்றார்
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாமே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிக்கிடந்த தூறாய் விடும் ”
எனவேதான் சிறந்த இல்லாளுக்கு ஏற்ப பல நற்குணங்களை கொண்ட சகோதரி பத்மா அவர்கள் தன் சிறந்த நற்குணங்களால் மட்டுமல்ல செயற்திரனால் ஆளுமையால் உதயன் பத்திரிக்கை ஒருவாரம் வரவில்லை என்ற குறையே இல்லாமல் அதனை அருமையாக நிருவகித்து வருகிறார். நண்பர் லோகேந்திரலிங்கம் அவர்கள் வேறு வேலைகளுக்காக வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ சென்றுவிட்டால் அவரது அத்தனை பணிகளையும் அப்பழுக்கின்றி செய்து முடிப்பார். அதுவுமின்றி இரவு வேளைகளில் தன் கணவருடன் வீட்டுக்கு வரும் நண்பர்களை உபசரித்து விருந்தோம்பல் செய்வதிலும் சகோதரி சிறந்து விளங்குகிறார். ஒரு சிறந்த தந்தைக்கு உரிய நற்பண்பை வள்ளுவன் மிக அழகாக பின்வருமாறு விளக்குகிறார் ” தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் ” அந்தக்கடமையைக்கூட நண்பர் லோகன் மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளார் .முக்கனிகள் போலும் தன் மூன்று பிள்ளைகளையும் கல்வி கேள்விகளில் சிறக்கவைத்து கற்றறிந்தோர் சபைகளிலிலே முன்னிருக்கத்தக்க வகையில் வளர்த்து ஆளாக்கியுள்ளார்.இப்படிப்பட்ட தந்தைக்கு பிள்ளைகள் என்ன கைம்மாறு செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.வள்ளுவர்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்என்னும் சொல் ”
இப்படிப்பட்ட அருமையான பிள்ளைகளைப் பெற இவர்களின் பெற்றோர்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும் என மற்றவர்கள் வியந்து பாராட்டத்தக்கதாக வாழவேண்டுமாம். அப்படியான ஒரு உன்னதமான வாழ்க்கையை பிள்ளைகள் வாழவேண்டுமாம்.முக்கனி போலும் பிள்ளைகள் மூவரைப் பெற்றெடுத்து அவர்கள் இன்று எமது சமூகத்தில் உன்னதமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக அவரது அன்பு புதல்விகள் யாழினி மற்றும் ஜனனி ஆகியோர் , உதயன் பத்திரிகையின் வடிவமைப்பில் இருந்து பக்கங்கள் தயாரிப்பதுவரை மிகப்பெரும் பங்காற்றிவருகின்றார்குள்.
வேற்று இன மக்களாலும் விரும்பபடுபவர்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இவருக்கு “நட்பின் நாயகன் ” என பட்டம் சூட்டியிருந்தார். இந்தப் பட்டத்திற்கு மிகப்பொருத்தமானவர் திரு. லோகன் அவர்கள்.கனேடிய அரசியலில் மாற்றின அரசியல் பிரமுகர்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவர் மத்திய பாராளுமன்றத்தை ஆட்சி செய்யும் எந்தக் கட்சியை சேர்ந்த பிரதமமந்திரியாக இருந்தாலும் அமைச்சர்களாகருந்தாலும் அதே போன்று மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மாகாண முதல்வர்கள் ஆகியோரின் நட்பையும் நன் மதிப்பைப்பெற்று வாழ்ந்துவருகின்றார். எடுத்துக்காட்டாக முதியோர் அமைச்சர் றேமன் சோ கல்வி அமைச்சர் ஸ்டிபன் லட்சே போன்றவர்கலின் பேரன்பை பெற்றவர்.
மொழியாளுமை
ஒரு ஊடகவியலாளருக்கு இருக்கவேண்டிய மிகப்பெரிய தகமையாக கருதப்படுவது சொல்லாட்சி சொல்வளம் புதிய சொற்தொடர்களை பயன் படுத்தும் முறை இவற்றில் கைதேர்ந்தவர் திரு. லோகன் அவர்கள் அதுவுமன்றி எழுத்துப்பிழை என்பது பத்திரிகையில் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு தனியான புருரீடர்களை வைத்திருப்பார்கள் . அனால் உதயன் பத்திரிகையில் இத்தனையாண்டு காலம் எழுத்துப்பிழையில்லாமல் வெளிவருகின்றது என்றால் அதற்கு காரணம் முழுக்க முழுக்க லோகன் அவர்கள்தான் .முற்றுப்புள்ளி கம போன்ற ஒரு சின்னவிடயத்தைக்கூட மிகக் கவனமாக கையாளும் ஆற்றல் வாய்ந்தவர்.இங்குள்ள பலநாட்டு வர்த்தக பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் ஆகியோரின் நட்பும் இவருக்குண்டு. இதேவேளை தமிழில் எப்படி ஆளுமைமையும் சொல்லாட்சியும் இருக்கிறதோ அதே போன்று ஆங்கிலத்திலும் புலமை மிக்கவராக இருக்கிறார்.நான் பலதடவை அவரது காரியாலயத்திற்கு சென்று பேசிக்கொண்டு இருக்கும் போது தொலைபேசியில் பேசிக்கொண்டே ஆங்கிலத்தில் சில கட்டுரைகளை தட்டச்சில் அவர் பதிவுசெய்கின்ற வேகம் என்னை வியக்கவைக்கும். இரண்டு மொழிகளையும் கையாளுவதில் கை தேர்ந்தவராகவும் இருக்கின்றார்.
கலைப்பாலம்
உதயன் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்ட இந்த இருபத்தியாறு ஆண்டுகளில் உதயன் விழாவை பலவாண்டுகள் மிகச் சிறப்பாக நடாத்தி வந்திருக்கிறார்.இந்த விழாவின் ஊடாக இலங்கை இந்தியா மடுமன்றி தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தும் கூட பலகலைஞர்களையும் கல்விமான்களையும் அழைத்துவந்து இங்குள்ளவர்களோடு பழகும் வாய்ப்பை வழங்கி வந்திருக்கின்றார் . எ + டு கவிப்பேரரசு வைரமுத்து மனோரமா ஆச்சி பல நடிகர்கள் நடிகைகளை அழைத்துவந்திருக்கின்றார். இலங்கையில் இருந்து பிரபல எழுத்தாளர்களான திரு திருமதி பத்மா சோமகாந்தன் போன்றவர்களையும் அழைத்துவந்திருக்கிறார். இத்தகைய செயல்களின் மூலம் எமக்கொரு கலைப்பாலமாகவே திகழ்ந்துவருகின்றார்.
ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
யாரை நாங்கள் வாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறோம் என்றால் யார் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கிறார்களோ அவர்களே வாழ்ந்தவர்கள் ஆகிறார்கள். விவேகசிந்தாமணியில் அருமையான ஒரு பாடல் சொல்லும்
” ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே ”
இவ்வாறு பயனில்லாத வாழ்க்கையை பலவாண்டுகள் வாழ்வதைவிட தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பவர்களே வாழ்ந்தவர்கள் ஆகிறார்கள் அந்த வகையில் நண்பர் லோகன் அவர்களும் வாழ்வாங்கு வாழ்பவராக இருக்கிறார். ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை அவனது நண்பர்களில் இருந்து அறிந்து கொள் ” என்றொரு பழமொழி உண்டு.நண்பர் லோகனுடைய நண்பர்கள் எல்லாம் ” உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ” என்ற வகையில் நண்பர் லோகேந்திரலிங்கம் அவர்கள் எடுக்கின்ற எந்த முயற்சிகளுக்கும் அவருக்கு தோளோடு தோள் நிற்கிறார்கள் . உதவும் கரங்கள் ஊடாக ஈழத்தில் வாழும் எம்மவர்களுக்கு பலவழிகளிலும் நற்பணியாற்றி வருகிறார்கள் ஏழைப்பிள்ளைகளுக்கு புத்தகங்கள் கொப்பிகள் உணவுப்பொருட்கள் என காலமறிந்து பணியாற்றி வருகின்றார். எல்லாவற்றிக்கும் மேலாய் பெரும் பொருட்செலவில் அம்புலன்ஸ் வண்டியைக்கூட வாங்கி கொடுத்திருக்கிறார். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு ” என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப பலவறிய குழந்தைகளுக்கும் பாதிக்கப்பட்ட பலருக்கும் பலவழிகளிலும் உதவி வருகின்றார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் “நந்தவனம் ” என்ற சஞ்சிகையை கனடாவில் வெளியிடும் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு இலைமறை காயாக இருக்கும் பலரை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.பல்வேறு நாடுகளில் இருக்கும் பலருக்கு விருதுகள் கிடைப்பதற்கும் இவரே காரணமாகவும் இருந்திருக்கிறார்..
நானும் நட்பின் நாயகனும்
நண்பர் R.N.லோகேந்திரலிங்கம் அவர்களை கனடாவில் மட்டுமல்ல ஊரிலேயே நான் நன்கறிவேன்.மின்சாரசபை பொறியியலாளராக இருந்தவர் .அப்போதே கவியாற்றும் வல்லமையும் அவருக்கிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் என் நினைவில் வருகின்ற ஒரு நகைச்சுவை சம்பவம் என்னுடைய இன்னும் ஒரு நண்பர் பொன்.குலேந்திரன் யாழ்ப்பாணத்தில் ஒரு கவியரங்கை நடத்தியிருந்தார். அதில் நண்பர் லோகனும் பங்கேற்றிருந்தார். லோகனை அழைக்கும் போது குலேந்திரன் போலி ” லோகேந்திரலிங்கம் என்று அழைத்திருந்தார். சபையோர் சிரித்துவிட்டார்கள். அதற்கு குலேந்திரன் விளக்கம் சொன்னார். லோகன் போலி என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார்.அதனால்த்தான் அப்படி அழைத்தேன் என்றார். என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல காரியங்கள்நடந்திருக்கிறது என்றால் அது கனடாவில் நண்பர் லோகனாலேயே நடந்திருக்கிறது.
ஒன்று நான் கனடாவில் முதல் முதலாக பெற்ற தங்கப்பதக்கம் அவர் நடத்திய கவிதைப் போட்டிக்கு எனக்கு கிடைத்தது .அதை இன்றும் என் கழுத்தில் சுமந்துவருகின்றேன். இரண்டாவது நான் சிறுவனாக இருந்தபோது யாரவது உனக்கு பிடித்த நடிகையார் எனக்கேட்டால் சற்றும் தயங்காமல் மனோரமா ( ஆச்சி ) என்று சொல்லுவேன். எனக்கு மிகப்பெரும் கனவாக இருந்தது நான் வாழ்வில் ஒருமுறையாவது நடிகை மனோரமாவை பார்த்துவிடமாட்டேனா என்ற ஏக்கம் எப்போதும் எனக்கு இருந்தது. அந்தக் கனவை நனவாக்கியவர் லோகன் அவர்கள் அவரது உதயன் விழாவிற்கு பிரதம விருந்தினராக மனோரமா கலந்துகொண்டார். அவரை அந்த மேடையில் நேரடியாக பார்த்ததுமட்டுமன்றி அவருக்கு முனாலேயே நடிக்கின்ற வாய்ப்பையும் தந்தவர் லோகன் அவர்கள். மனோரமா ஆச்சி வெறும் நடிகை மட்டுமல்ல ஒரு வரலாறு. மூன்று தசாப்தங்களாக மூன்று முதலமைச்சர்களோடு நடித்த பெருமைக்கு உரியவர். அவர் என்னை வாயாரப் புகழ்ந்து பாராட்டினார்.
இது என்வாழ்நாளில் மறக்க முடியாத பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள். மூன்றாவது கனடாவுக்கு வெறும் கணபதிப்பிள்ளை திருரவீந்திரநாதனாக வந்த “கணபதி ரவீந்திரன்” ஆக மாற்றிய பெருமை கீதவாணி EAST FM அதிபர் திரு.நாடா ராஜ்குமாரைச் சாரும். அதேவேளை இந்த மண்ணுக்கு என்னை ஒரு நாடக கலைஞனாக அறிமுகம் செய்துவைத்த பெருமை நண்பர் லோகேந்திரலிங்கம் அவர்களையே சேரும். இன்று எனக்கு கலைவேந்தன் கலைஞானி கலைமுரசு என்று பல பட்டங்கள் பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது என்றால் அவை அத்தனைக்கும் அவர் தனது இரண்டாவது உதயன் விழாவில் ஒரு பத்து நிமிடம் நண்பர் சுப்பிரமணியம் சுந்தரேஸ்வரனின் “சிதம்பர சக்கரம் “நாடகத்தில் நடிக்க அளித்த வாய்ப்பே காரணம் .
இன்று தனுடைய எழுத்துப்பணியில் பொன்விழாவை காணும் நண்பருக்கு இத்தகைய ஒரு கட்டுரையை எழுத வாய்ப்பளித்த இறையருளுக்கும் நண்பர் லோகனுக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன். வாழ்க பல்லாண்டு வளர்க புகழோடு என வாழ்திவிடை பெறுகின்றேன்