குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரம்: ஜூன் 12 முதல் 20 வரை கொண்டாட்டம்

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஜூன் 12 முதல் 20-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில்,  75 இடங்களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரத்தைக் கொண்டாடவிருக்கிறது. இதன்படி, குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையில் கவனம் செலுத்தவும், அதனை ஒழிப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாவட்ட அதிகாரிகள், குழந்தை நல குழு, காவல்துறை/ சிறப்பு குழந்தைகள் பிரிவு காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் இதர பங்குதாரர்களின் உதவியுடன் இந்த ஒரு வார காலத்தில் 75 இடங்களிலுள்ள  கழிவுத் துணுக்கு மற்றும் வாகன சந்தைகளில் பணிபுரியும் குழந்தைகளின் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள்  தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இதர பங்குதாரர்களுடன் காணொளி வாயிலான கூட்டங்கள் நடைபெற்றன. 18 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 800 அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.