அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

ராணுவத்தி தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 75 சதவிகிதம் பேர் பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், ராணுவத்தில் சேர உடற்தகுதியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் வேலை என்றால் அதற்கு பின்னர் நிலையான வேலை பெற, ஏற்கனவே படித்து தயாராக இருக்கும் மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்றும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததோடு ரயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பீகாரில் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாநிலங்களில் தெலங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது.

சென்னையில், போர் நினைவு சின்னம் அருகே ராணுவத்தில் சேர முயற்சித்துவரும் ஏராளமான இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். 2020ம் ஆண்டே இவர்கள் உடற்தகுதி தேர்வை முடித்து ராணுவத்தில் சேர காத்திருந்தனர். ஆனால், கொரோனா காரணமாக எழுத்து தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனால் வயது வரம்பு தகுதி காலாவதி ஆகும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். தற்போது அக்னிபத் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்பவர்களுக்கு அசாம் ரைஃபில் படை, துணை ராணுவப் படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.