முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச சதூங்கக் கூட்டமைப்பு FIDE, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு AICF மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் TNSCA அனுமதியுடன் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் செஸ் உலகின் பொக்கிஷமாக கருதப்படும் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது . இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு குறித்து நாடு முழுவதும் மாணவ , மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய சதுரங்க சம்மேளனம் சார்பில் மாணவ / மாணவியர்களுக்கான செஸ் போட்டிகளை நடத்துவதற்கான பணிகள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன . அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 38மாவட்டங்களிலுமே 15 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்வையிடும் வாய்ப்பினை வெற்றிபெறும் ஒரு வீரர் ஒரு வீராங்கனைக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் 15 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டி இரண்டு நாட்கள் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 21.06.2022 மற்றும் 22.06.2022 தேதிகளில் நடைபெற்றது . இப்போட்டியில் 210 வீரர்கள் / வீராங்கனைகள் கலந்து கொண்டனர் மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்றது.பெண்கள் பிரிவில் இராமநாதபுரம் , செய்யதம்மாள் மெட்ரிக்பள்ளி மாணவி எம் . மிருதுளா மற்றும் ஆண்கள் பிரிவில் இராமநாதபுரம் நேசனல் அகடாமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் வி.எம்.ரக்சன் ஆகியோர் முதலிடம் பெற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பை பெற்றனர் .
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., அவர்களை செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியினை பார்வையிடச் செல்லும் மாணவி எம்.மிருதுளா மற்றும் மாணவன் வி.எம்.ரக்சன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர் .