குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு சிறந்த உதாரணம் கோவை மாநகரம் – பியூஷ் கோயல்

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா (SIMA) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சைமா ஜவுளி கண்காட்சி 2022-ஐ மத்திய ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். மாநாட்டு மலர் மற்றும் சைமா வித்துக்களை வெளியிட்டு பேசிய அவர், கோவை நகருக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். கோவை மாநகரம் ஜவுளி உற்பத்திக்கு மட்டுமின்றி, நூற்பாலை எந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த உபபொருட்கள் உற்பத்தியில் நாட்டின் முன்னணி தொழில் மையமாக திகழ்வதாக கூறினார். உலகளவிலும், ஜவுளி உற்பத்திக்கு பெயர்பெற்ற இடமாக கோவை திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இப்பகுதியில் உள்ளவர்களின் தொழில்முனைவு திறனை வெகுவாக போற்றிய அவர், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறையின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாக கோவை திகழ்கிறது என்றார். இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி மோட்டார் பம்புகள், வெட்கிரைண்டர், பவுண்டரி தொழிலுக்கும் கோவை பிரசித்தி பெற்று திகழ்வதோடு, ஜவுளி தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்கள் உற்பத்தியிலும் முக்கிய இடம் வகிப்பதாக கூறினார்.  

கொவிட் பெருந்தொற்று பாதிப்பதால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை சிறந்தமுறையில் பயன்படுத்தி இப்பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் தொழிலை மேம்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், சவால்களை வாய்ப்பாக பயன்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் 440 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று பாதிப்புக்கு பிந்தைய காலத்தில் இந்திய ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ மற்றும் சர்வதேச ஆலோசனை அமைப்பான கியர்னி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின் படி, 2026-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 81 சதவீதம் அதிகரித்து, 65 பில்லியன் டாலரை எட்டும் என்றும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் 7.5 – 10 மில்லியன் (1 கோடி) புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறிய அவர், புவி-அரசியல் சூழல் காரணமாக  சர்வதேச வர்த்தக நடைமுறை குறிப்பாக, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மிகக்குறுகிய காலத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய திரு பியூஷ் கோயல், இங்கிலாந்து, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் உடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் கூறினார். கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை இரண்டாவது இடம் வகுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வருவாயிலும் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். தற்சார்பு இந்தியாவுக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஜவுளித்தொழில் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்குள் ஜவுளித்துறையில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் இந்த இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித்தொழில் தேக்கமடைந்திருப்பது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், இந்தியா பஞ்சு பற்றாக்குறை உள்ள நாடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். பருத்தி தொடர்பான தொழில்நுட்ப இயக்கம் குறித்து ஏற்கனவே திரு சுரேஷ் கோட்டக் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். பருத்தி தரத்தை மேம்படுத்தவும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் ஏற்கனவே குறுகிய கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சைமா அமைப்பால் நடத்தப்படும் இது போன்ற கண்காட்சிகளை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.